வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், , சென்னையின் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை பெய்தது.

நேற்று நள்ளிரவு திடீரென காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. நேரம் செல்ல, செல்ல மழை மிகக் கடுமையாக பெய்யத் தொடங்கியது. சென்னை- கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அடையாறு, குரோம்பேட்டை, மீனம்பாக்கம், கோடம்பாக்கம், சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை, போரூர், ராமாபுரம், வளசரவாக்கம், விருகம்பாக்கம், கே.கே.நகர், மாம்பலம், சைதாப்பேட்டை, அனகாபுத்தூர், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், முடிச்சூர், அண்ணாநகர், நங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களிலும், சென்னையின் புறநகரிலும் கனமழை கொட்டியது.

இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

திருத்தணியில் விடிய விடிய தற்போதுவரை பெய்து வரும் கனமழை 15 சென்டிமீட்டர் மழை பெய்து உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு மேலும் திருத்தணி தாலுகா திருவலங்காடு பகுதியிலும் 12 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

திருவள்ளூரில் 10 மணி நேரத்தில் மட்டும் 22 செ.மீ.மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து இடியுடன்  கூடிய கனமழை தொடர்ந்தாலும் காலாண்டுத்  தேர்வுகள் நடைபெற்று வருவதால். திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என  மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

இதே போல் கடலூர் மாவட்டத்திலும் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. மதுரை, விருதுநகர், தேனி போன்ற மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது.