அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தமிழகம் மற்றும் கேரளாவுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கீழ்க்கட்டளை, மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதே போன்று நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்றிரவு முழுவதும் பலத்த மழை பெய்தது, ஏற்கனவே நீலகிரி, திருவாரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.

இதையடுத்து நீலகிரி மாவட்டபள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார். திருப்பூரில் பள்ளி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதே போல் திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.