சென்னை அருகே பூந்தமல்லி யில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைத்த ரூ.80 லட்சம் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக குடோன் உரிமையாளரிடம் விசாரிக்கின்றனர்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனஜோராக விற்பனை செய்யப்படுகிறது. இதனை போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தாலும், சிலர் பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருப்பது வாடிக்கையாக உள்ளது.

 

இந்நிலையில், சென்னை பூந்தமல்லி அருகே உள்ள ஒரு குடோனில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்துள்ளதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, குடோனில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஏராளமான பண்டல்கள் இருந்தன. அதனை பிரித்து பார்த்தபோது பான்பராக், மானிக்சந்த், ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மொத்த எடை 10 டன். இதன் மதிப்பு ரூ.80 லட்சம் என கூறப்படுகிறது. 

தொடர்ந்து, குட்காவை பதுக்கி வைத்திருந்த குடோன் உரிமையாளரிடம் போலீசார்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் அடையாறு பகுதியில் புருஷோத்தமன் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்படி, அடையாறு துணை கமிஷனர் ஷேசாய்சிங் தலைமையிலான போலீசார் குட்காவை பறிமுதல் செய்தனர்.