Chennai famous jewelery chairman who has taxed the victims

நாடுமுழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.) நடைமுறைக்கு வந்தபின், முறையாக வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்த சென்னையைச் சேர்ந்த பிரபல நடைக்கடை அதிபரை ஜி.எஸ்.டி. புலனாய்வு பிரிவினர் நேற்று கைது செய்தனர்.

இந்த நகைக்கடை அதிபர் சென்னை மட்டுமல்லாது, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், கோவை உள்ளிட்ட பல இடங்களில் ஷோரூம்கள் வைத்து நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இவர் நகை தயாரிப்பின் போது அரசுக்கு செலுத்த வேண்டிய உற்பத்தி வரியான ரூ.20 கோடியை செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததால், ஜி.எஸ்.டி. விதிமுறைப்படி கைது செய்யப்பட்டார். ஜி.எஸ்.டி. வரி நாடுமுழுவதும் நடைமுறைக்கு வந்தபின் நடக்கும் முதல் கைது இதுவாகும்.

இது குறித்து சென்னை மண்டல ஜி.எஸ்.டி. புலனாய்பு பிரிவினர் கூறுகையில், “ கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசு வகுத்த விதிமுறையின்படி, தங்க நகைகள் தயாரிக்கும் போது, அதற்கு உற்பத்தி வரியாக ஒரு சதவீதம் செலுத்த வேண்டும். ஆனால், சென்னையைச் சேர்ந்த இந்த நகைக்கடை அதிபர் பலஆண்டுகளாக தான் தயாரித்த நகைகளுக்கு உற்பத்தி வரி செலுத்தாமல் இருந்துள்ளதை புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, தொடர்ந்து புலனாய்வு விசாரணைகள் நடத்தப்பட்டு, ஆதாரங்கள் திரட்டப்பட்டன. அவரின் நகைக்கடைகளிலும் ஒரே நேரத்தில் ஆய்வுகளும் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதில், அவை அணைத்தும் போலியானது என்பது தெரியவந்தது. அந்த நகைக்கடை அதிபரிடம் விசாரணை நடத்தியதில், உற்பத்தி வரி செலுத்தாமல் ரூ.20 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இ.ஆர். ரிட்டன்ஸ்7 படிவத்தையும் அந்த நிறுவனம் முறையாக தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து முதல்கட்ட விசாரணைக்கு பின் ரூ.4.9 கோடி வரியை அந்த நகைக்கடை அதிபர் செலுத்தினார்.

இருப்பினும், வரி ஏய்ப்ப செய்த குற்றத்தின் அடிப்படையில், அவர் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டார். சென்னை மாநகர குற்றிவியல் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி நேற்று உத்தரவிட்டார்” எனத் தெரிவித்தார்.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு வந்த பின் ஏராளமான உற்பத்தியாளர்கள் முறையாக வரி செலுத்துவதில்லை என புகார்கள் தொடர்ந்து வருவதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், ஒரு பொருளுக்கு ஜி.எஸ்.டி. வரியைக் காட்டிலும், அதிகமாக வசூலிக்கும் வர்த்தகர்கள், கடைக்காரர்கள் மீதும் நடவடிக்கை விரைவில் பாயும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.