கடந்த 15ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் முதல்வர் ஒ.பி.எஸ்., ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தற்காலிக அவசர சட்டம், டெல்லியில் இருந்து பெற்று வந்தார். ஆனால் அதனை ஏற்க மறுத்த ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை முதல் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவர்களை, போலீசார் வலுக்கட்டாயமாக அகற்றி வருகின்றனர்.
கோவை, சேலம், மதுரை, தேனி உள்பட அனைத்து மாவட்டங்களிலும் போலீசார், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை குண்டு கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். சில இடங்களில் தடியடியும் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்திய லட்சக்கணக்கான ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால், சென்னை நகரம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

குறிப்பாக இன்று சட்டப்பேரவை கூட்டம் தொடங்குகிறது. இதனால், சட்டமன்றத்தை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு கேட்டு போராட்டம் நடத்தும் மாணவர்கள் முற்றுகையிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அகற்றினர்.

வழக்கமாக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கடற்கரை சாலை வழியாக தலைமை செயலகம் செல்வார். ஆனால், இன்று அண்ண சாலையை சுற்றி சென்றார். அதேபோல் அனைத்து அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் அண்ணாசாலை வழியாக சென்றனர். இதனால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
வேலைக்கு செல்வோர், கடுமையாக பாதிக்கப்பட்டனர். அனைத்து வாகனங்களும் ஊர்ந்து செல்கின்றன. அனைத்து பகுதியிலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
