சென்னை திருவான்மியூரில் வீட்டின் பால்கனி இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் பரிதாபமாக பலியானார்கள். 

சென்னை திருவான்மியூர் புத்திரகண்ணி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மாரியம்மாள் (75). இவரது பக்கத்து தெருவை சேர்ந்தவர் துளசியம்மாள் (75). நேற்று இரவு மாரியம்மாள் வீட்டுக்கு, துளசியம்மாள் சென்றார். அங்கு இருவரும் வீட்டின் முன் பகுதியில் தெருவில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அப்போது, திடீரென அவர்கள் இருந்த வீட்டின், பால்கனி திடீரென இடிந்து 2 பேர் மீதும் விழுந்தது. 

இதில், பேசி கொண்டிருந்த 2 பெண்களும், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். அப்போது அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்த, தமிழ்ச்செல்வி (4) என்ற சிறுமியின் தலையிலும் கட்டிட இடிபாடுகள் விழுந்து படுகாயமடைந்தாள். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதை பார்த்ததும், அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். படுகாயமடைந்த சிறுமியை மீட்டு உடனடியாக அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

தகவலறிந்து திருவான்மியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். திடீரென இடிந்து விழுந்த கட்டிடம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் ஆவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வட்டாட்சியர், வருவாய்த்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.