central technical team inspects pudhuchery
புதுச்சேரி மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி நிலை குறித்து ஆய்வு செய்ய வந்துள்ள மத்திய குழு இரு அணிகளாக பிரிந்து இன்று புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஆய்வு செய்து வருகிறது.
புதுச்சேரியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்ய வேண்டிய மழையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே பெய்தது. இதனால் மாநிலம் முழுவதும் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதே போன்று தமிழகத்திலும் பருவ மழை பொய்த்துப் போனதால் கடும் வறட்சி நிலவுகிறது.
இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் வறட்சி மாநிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிக்கு நிபுணர் குழுவை அனுப்பி, ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று மத்திய. அமைச்சர்களை சந்தித்து வலியுறுத்தினார்.
அந்த கோரிக்கையை ஏற்று மத்திய வேளாண்துறை இணை செயலாளர் ராணி குமுதினி தலைமையிலான குழு புதுச்சேரிக்கு வந்தது. இக்குழுவில் 11 பேர் இடம் பெற்றுள்ளனர்.
முதலில் புதுச்சேரி தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் மத்திய குழுவினர் ஆலோசனை நடத்தினர். அப்போது புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வறட்சியால் ஏற்பட்ட பாதிப்புகள், சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் சேதம், குறித்து படக்காட்சி மூலம் மத்திய குழுவுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்த மத்திய குழுவினர் இரு அணிகளாக பிரிந்து புதுச்சேரி, மற்றும் காரைக்காலில் பார்வையிட்டு வருகின்றனர்.
மத்திய வேளாண் இணைச் செயலர் ராணி குமுதினி தலைமையிலான குழு புதுச்சேரி பத்துக்கண்ணு, காட்டேரிக்குப்பம், சோரப்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலும், மத்திய அரசு அதிகாரி பொன்னுசாமி தலைமையிலான குழு கோட்டுச்சேரி, திருவெட்டிக்காடு, புத்தகுடி, டிஆர் பட்டினம், வாஞ்சூர் உள்ளிட்ட இடங்களில் வறட்சி பாதிப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறது.
