Central Square to get 20 floor twin towers

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள “டைம்ஸ் ஸ்கொயர்”, லண்டனில் உள்ள “டிராபல்கர் ஸ்கொயர்” போன்று சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே, “சென்ட்ரல் ஸ்கொயர்” அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பூந்தமல்லி சாலையில், 20 மாடிகள் கொண்டதாக அமைக்கப்படும் இந்த இரட்டை கோபுரம் ரூ.400 கோடி மதிப்பில் கட்டப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்கள் குறித்த வரைபடம், திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின்(சி.எம்.டி.ஏ.) ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது, “ இந்த இரட்டை கோபுரம் 60 மீட்டர் உயரம் கொண்டதாகவும், அதில் பல்வேறு வசதிகள் நிரம்பியதாகவும் அமையும். இதில் பயணிகள் ஓய்வு எடுக்கும் அறைகள், கழிவறைகள் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் நிரம்பியதாக ஏற்படுத்தப்படும், மேலும், இங்கிருந்து சென்னையில் பிறபகுதிகளுக்கும் பஸ் போக்குவரத்து இருக்கும்படியான இடமும் அமைக்கப்படும். மேலும், இந்த கட்டிடத்தில் உணவகங்கள், கடைகள் போன்றவைகளும் உருவாக்கப்படும்.

சென்ட்ரல் ரெயில் நிலையம், மெட்ரோ ரெயில் நிலையம், புறநகர் ரெயில் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு தேவையான வசதிகள் இந்த இரட்டை கோபுரத்தில் செய்யப்படும். எந்தெந்த மாதிரியான வசதிகள் செய்வது குறித்து இனிமேல் திட்டமிடப்படும்” என்று தெரிவித்தனர்.

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து ரிப்பன் மாளிகை வரை, ரிப்பன் மாளிகைக்கு எதிர்புறம் உள்ள காலியிடம் ஆகியவை விரிவுபடுத்தப்பட இருக்கிறது. இந்த சென்ட்ரல் ஸ்கொயரில் அடித்தளத்தில் வாகனங்கள் நிறுத்துமிடமும் உருவாக்கப்பட உள்ளது.

ரிப்பன் மாளிகை, விக்டோரியா ஹால் ஆகியவற்றுக்கு எதிர்புறம் இருக்கும் நிலப்பகுதிகளில் பயணிகள் நடை பாதைக்காகவும், அமரும் பகுதியாகவும் மாற்றப்பட உள்ளது. இந்த கட்டிடங்களுக்கு பின்புறம் இருக்கும் பக்கிங்ஹாம் கால்வாய் பகுதி, பசுமையான பகுதியாகவும் மாற்ற திட்டமிடப்பட்டள்ளது.