சி.எஸ்.கே. வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்துக்கு புறப்பட்டனர். மைதானத்துக்கு 5 மணிக்கே செல்லவேண்டிய சிஎஸ்கே வீரர்கள் 45 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிக்கு கடும எதிர்ப்பு எழுந்துள்ளது. இன்று காலை முதலே சென்னை சேப்பாக்கம் பிரதான வாயில் முன்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 

மைதானத்தின் பிரதான வாயிலை பூட்டுப்போட தமிழர் வாழ்வுரிமை கட்சியினர் முயன்றனர். இதனை அடுத்து அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

தற்போது சென்னை அண்ணாசாலையில் பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அண்ணா சாலையில் ஏராளமானோர் திரண்டு போராட்டம் நடத்தி
வருகின்றனர். இதனால் அண்ணாசாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே சிஎஸ்கே வீரர்கள், ஓட்டலில் இருந்து மைதானத்துக்கு செல்ல
உள்ளனர். தற்போது அவர்கள் புறப்பட தயாராக உள்ளனர்.

சி.எஸ்.கே. வீரர்களை பாதுகாப்பாக, சேப்பாக்கம் மைதானம் கொண்டு செல்ல போலீசார் திட்டமிட்டு வருகின்றனர். வீரர்கள் செல்லும் பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர். 

தற்போது சி.எஸ்.கே. வீரர்கள் பாதுகாப்பாக ஓட்டலில் இருந்து புறப்பட்டுள்ளனர். வீரர்கள் 5 மணிக்கே சேப்பாக்கம் மைதானத்துக்கு செல்ல வேண்டி இருந்த நிலையில், போராட்டம் காரணமாக 45 நிமிடங்கள் தாமதமாகவே அவர்கள் புறப்பட்டுள்ளனர். வீரர்கள் செல்லும் வாகனத்திற்கு முன்னும் பின்னும் போலீசார் வாகனம் பாதுகாப்புக்காக சென்றது. 

இதன் பின்னர் சி.எஸ்.கே. வீரர்கள் பாதுகாப்பாக சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு சென்றடைந்தனர்.