காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 15 வது கூட்டத்தில் மேகதாது பிரச்சனை குறித்து விவாதிக்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

காவிரி பிரச்சினையை அடுத்து உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் கடந்த 2018 ஜூன் 1ம் தேதி அமைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 15 வது கூட்டம் டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இடம்பெறுள்ளனர். தமிழக அரசு சார்பில் தமிழக அரசின் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா தலைமையில் அதிகாரிகள் பங்கேற்றனர். காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன், கேரள மாநில நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் பி.கே.ஜோஸ், கர்நாடக மாநில நீர்வளத்துறை தலைமை செயலாளர் ராஜேஷ், பாண்டிசேரி மாநில ஆணையர் மற்றும் செயலாளர் விக்ராந், ராஜா உள்ளிட்ட 4 மாநிலத்தை சேர்ந்த முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மேகதாது அணை விரிவான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்க நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்படி, காவிரி நீர் புள்ளி விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, கர்நாடக அரசு தரப்பில், மேகதாது அணை குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவதால் கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனவே இதுகுறித்த விவாதம் தவிர்க்கப்பட்டதாக தமிழக அரசின் சார்பில் வெளியான செய்திக்குறிப்பின் மூலம் தெரியவந்திருக்கிறது.

இதேபோல் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற 14-வது கூட்டத்திலும் கர்நாடக அரசு மேகேதாட்டு திட்டம் அணைகுறித்து விவாதிக்க வலியுறுத்தியதற்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்புதெரிவித்தது. இதனால் மேகேதாட்டு திட்டம் குறித்து அந்த கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை. பின்னர், ஆணையத்தின் 15-வது கூட்டம் டிசம்பர் 17-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டது. அதில் மேகேதாட்டு திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டம் திடீரென டிசம்பர் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனிடையே காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்த‌ கூட்டத்தில் (டிசம்பர் 27) மேகேதாட்டு திட்டத்துக்கு அனுமதி கிடைக்கும். அதற்கான முயற்சிகளில் கர்நாடக அரசு ஈடுபட்டு வருகிறது என்று கர்நாடக முதலமைச்சர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.டிசம்பர் 27-ம் தேதி நடைபெறுவதாக இருந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் திடீரென்று தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 15 வது கூட்டம், காணொளி காட்சி வாயிலாக இன்று நடைபெற்றது.