வரி ஏய்பு புகார் தொடர்பாக சென்னையில் பிரபல காசா கிராண்ட் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் பல கோடி ரூபாய் பணம் முறைகேடாக பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை திருவான்மியூர் எல்.பி. சாலையில் தலைமையிடமாக பிரபல காசா கிராண்ட் கட்டுமான நிறுவனம் இயங்கி வருகிறது.

 

இந்த நிறுவனத்திற்கு கோவை, பெங்களூர் உள்ளிட்ட பல இடங்களில் கிளை அலுவலகங்கள் உள்ளன. இந்த கட்டுமான நிறுவனம் சென்னை, கோவை என பல இடங்களில் பல நூறு கோடி ரூபாய் முதலீட்டில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பெங்களூரில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனத்துடன் இணைந்து பல இடங்களில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. 

இதனால் இந்த நிறுவனம் பல கோடி ரூபாயை வங்கிகளில் பரிமாற்றம் செய்து வருகிறது. அதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சோதனையில் பல நூறு கோடி ரூபாய் முறைகேடு நடந்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக வெளியாகியுள்ளது. மேலும், போலி கட்டுமான நிறுவனங்கள் தொடங்கி இதில் பல கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்ட ஆவணங்கள் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக கூறுகின்றனர். இந்த சோதனை 2-வது நாளாக நீடித்து வருகிறது. முன்னதாக கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் குணசேகரன் நில மோசடி தொடர்பாக ஏப்ரல் 5-ம் தேதி போலீசார் கைது செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.