கிருஷ்ணகிரி
 
கிருஷ்ணகிரியில் சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிவரும்போது கார் பள்ளத்தில் கவிழ்ந்து ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். உடன் சென்ற நண்பர்கள் இருவர் பலத்த காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, சந்தனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (38). விவசாயியான இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்கள் விக்ரம், அனுமந்தகௌடா ஆகியோருடன் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஐயூர் வனப்பகுதிக்கு காரில் சுற்றுலா சென்றார்.

அங்கு அவர்கள் வனப்பகுதியை சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் காரில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். வரும்போது காரை சுரேஷ் ஓட்டி வந்தார். 

உனிசெட்டி அருகில் கார் வந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த பெரிய பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில், சுரேஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விக்ரம் மற்றும் அனுமந்தகௌடாவுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக வந்தவர்கள் இவர்கள் இருவரையும் மீட்டனர். பின்னர், சிகிச்சைக்காக அவசர ஊர்தி மூலம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த சுரேஷின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக தேன் கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.