தர்மபுரி அருகே சாலையில் தாறுமாறாக ஓடிய கார், மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த 5 பேர் நண்பர்களுடன் நேற்று இரவு உறவினர்கள் வீட்டுக்கு சென்று விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கார் அரூர் அருகே வந்துக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தவிடன் சாலையில் தாறுமாறாக ஓடியது. 

இதனையடுத்து கார் சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது. இதில் சலிம், ஏகநாதன், குலாப் ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் 2 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். உடனே விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் விபத்தில் உயிரிழந்தவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.