நீலகிரி

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது. இதனை ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டத் தேர்தல் பிரிவு சார்பில், புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதுக் குறித்துப் பள்ளி மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊட்டியில் நேற்று நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சிற்கு ஆர்.டி.ஓ. கார்த்திகேயன் தலைமை வகித்தார். இதில் 9–ஆம் வகுப்பு முதல் 12–ஆம் வரை படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த முகாமை ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியது:

“இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி, ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக 15 வயது முதல் 17 வயது வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளிப்பது முகாமின் நோக்கமாகும்.

18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தகுதியுடையவர்கள் ஆவார்கள். நாம் ஜனநாயக முறைப்படி ஓட்டு போட்டு ஒருவரைத் தேர்ந்தெடுக்க முடியும். இந்தியாவில் வாக்காளரின் பங்கு முக்கியமானது. தேர்தலில் ஒருவரை தேர்ந்தெடுப்பது உங்களது பொறுப்பாகும்.

எனவே, கல்லூரி மாணவர்கள் கட்டாயம் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்க்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்த மாணவிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கு ஆர்.டி.ஓ. கார்த்திகேயன் பதிலளித்தார். இதில் ஊட்டி தாசில்தார் குமார், பள்ளி தலைமை ஆசிரியர் மீராகுமாரி, ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.