தஞ்சாவூர்
தஞ்சாவூரில் தடையின்றி நடத்தப்பட்ட சல்லிக்கட்டுப் போட்டியில் 23 காளைகளும், 50-க்கும் மேற்பட்ட இளைஞர்களும் கலந்து கொண்டு காளைகளை கட்டி அணைத்தனர்.
தஞ்சையை அடுத்துள்ளது மாதாக்கோட்டை கிராமம். இங்கு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி சல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் சல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து கடந்த சில ஆண்டுகளாக சல்லிக்கட்டு நடத்தப்படவில்லை.
நேற்று மாதாக்கோட்டையில் உள்ள மாதாகோவில் தெருவில் தடையை மீறி சல்லிக்கட்டு நடத்தினர்.
ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டதும் அங்கு திரண்டு இருந்த இளைஞர்கள் காளைகளை கட்டித் தழுவி அடக்கினர். சில காளைகள் இளைஞர்களின் பிடியில் சிக்காமல் சீறிப் பாய்ந்தன.
இந்த சல்லிக்கட்டு திருவிழாவில் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர். இதில் 25 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
சல்லிக்கட்டு நடத்தப்பட்டதையொட்டி தஞ்சை, மாதாக்கோட்டை, ராவுசாப்பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் திரண்டு வந்து சல்லிக்கட்டை கண்டனர்.
