தேனி மாவட்டம் முழுவதும் 23 இடங்களில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் மற்றும் காத்திருக்கும் போராட்டம் நடைப்பெற்றது.

தேனி நகராட்சி பேருந்து நிலையம் முன் தேனி, போடி, கொடுவிலார்பட்டி, ஆண்டிபட்டி, பெரியகுளம், தேவதானப்பட்டி, கோட்டூர் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் கல்லூரிகளின் மாணவ, மாணவிகள் புதன்கிழமை சல்லிக்கட்டுக்காக காத்திருக்கும் போராட்டத்தை தொடங்கினர். இரவு முழுவதும் நீடித்த போராட்டம், வியாழக்கிழமை 2-ஆவது நாளாக நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் தேனி சிவாஜிநகர், பாரஸ்ட் சாலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் பங்கேற்றனர்.

சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வணிகர்கள் சங்க பேரவை, தேனி உணவக உரிமையாளர்கள் சங்கம், மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கம் மற்றும் பல்வேறு பொதுநல அமைப்புகள் சார்பில் அதன் நிர்வாகிகள் மாணவர்களை சந்தித்து வாழ்த்திப் பேசினர்.

தேனி அருகே கோட்டூர், சீலையம்பட்டி ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கிராமமக்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

ஆண்டிபட்டியில் மதுரை காமராஜர் பல்கலைக் கழக கல்லூரி முன் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதே போல் எம்.ஜி.ஆர். சிலை முன் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டம் முழுவதும் 23 இடங்களில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் மற்றும் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஜல்லிக்கட்டு மற்றும் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, ஓய்வு பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம், மதுரை காமராஜர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக, கல்லூரி ஆசிரியர் சங்கம் (மூட்டா), ஓய்வு பெற்ற அரசு அனைத்துத் துறை ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்கம் ஆகியவற்றின் சார்பில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.கே.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதேபோன்று, கம்பம் வடக்கு தலைமை தபால் நிலையம் முன் சல்லிக்கட்டுக்கு ஆதரவாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டக் குழு நிர்வாகி லெனின் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் இளைஞர்கள், பொதுமக்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

தேக்கடி பகுதிக்கு சுற்றுலா சென்ற அமெரிக்காவை சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 10 பேர் கம்பத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பங்கேற்று பீட்டாவுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். மேலும் சல்லிக்கட்டுக்கு தங்கள் ஆதரவையும் தெரிவித்தனர்.