brutal brother who poured gasoline and burnt his brother while sleeping ...
சிவகங்கை
சிவகங்கையில் தூங்கிக் கொண்டிருந்த தம்பியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற கொடூர அண்ணனை காவலாளர்கள் கைது செய்தனர். சொத்துத் தகராறில் கொலை செய்தேன் என்று அண்ணன் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், காந்திவீதி, சந்தன மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவருடைய மகன்கள் கண்ணன் (35), முருகன் (30).
இதில் கண்ணனுக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். முருகனுக்கு இன்னும் திருமணமாகவில்லை.
கண்ணன் சிவகங்கையில் உள்ள காய்கறி சந்தையில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது தம்பி முருகன், ஒரு தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்தார்.
அண்ணன் – தம்பி இடையே சொத்து தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பும் கண்ணன், முருகன் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதில் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டனர்.
இதனையடுத்து அவரது உறவினர்கள் சமாதானம் செய்யவே இருவரும் அமைதியாயினர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முருகன் வீட்டுக்குள் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு நேரத்தில் முருகன் தூங்கிக் கொண்டிருந்த வீட்டிற்குள் போதையில் இருந்த கண்ணன் நுழைந்தார்.
பின்னர் கண்ணன், தூங்கிக் கொண்டிருந்த தனது தம்பி முருகன் மீது பெட்ரோலை ஊற்றி, தீவைத்தார். உடலில் தீப்பிடித்து எரிந்ததால் முருகன் அலறினார். சத்தம் கேட்ட யாராவது வந்து விடுவார்கள் என்று கண்ணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
உடனே அக்கம்பக்கத்தினர் தீக்காயமடைந்த முருகனை சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி முருகன் இறந்துபோனார்.
இந்தச் சம்பவம் குறித்து சிவகங்கை நகர் காவல் ஆய்வாளர் மோகன் வழக்குப்பதிந்து கண்ணனை கைது செய்தார். அவரிடம் நடத்திய விசாரணையில், சொத்து தகராறில் தனது தம்பியை எரித்து கொன்றேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார் கண்ணன்.
