ரேசன் கடைகளில் உளுந்து, துவரம்பருப்பு, பாமாயில் போன்றவை நிறுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவற்றைத் தடையின்ற வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இளையான்குடி பகுதியில் ரேசன் கடைகளில் பருப்புகள், பாமாயில் வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
இளையான்குடி பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ரேசன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்தகடைகளில் மாதந்தோறும் ரேசன் அட்டைதாரர்களுக்கு உளுந்து, துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வந்தன.
ஆனால், இந்த மாதம் துவரம்பருப்பு, உளுந்து, பாமாயில் ஆகியவை முற்றிலுமாக வழங்கப்படவில்லை.
எனவே, இதுகுறித்து ரேசன் கடை விற்பனையாளர்களிடம் கேட்டபோது “கடந்த மாதம் வரை அனைத்து அட்டைதாரர்களுக்கும் பொருள்கள் வழங்கப்பட்டு வந்தது. சனவரி மாதத்துக்கு அரசி, மண்ணெண்ணெய், சர்க்கரை, கோதுமை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பருப்பு, பாமாயில் வழங்கப்படவில்லை” என்று தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில், இளையான்குடி ஒன்றியத்தில் இந்தாண்டு மழை பொய்த்ததால் நெல், மிளகாய் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு விவசாயிகள் மிகவும் துயரத்தில் உள்ளனர்.
எனவே ரேசன் கடைகள் மூலம் உளுந்து, துவரம்பருப்பு, பாமாயில் தடையின்ற வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
