காமராஜர் பெயரில் தமிழகத்தில் நவோதயா பள்ளிகள்: அண்ணாமலை வலியுறுத்தல்!
காமராஜர் பெயரில் தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை துவங்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்
வேலூர் மாவட்டம்,வேலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கேவிகுப்பம் பேருந்து நிலையம் அருகில் பாரதிய ஜனதா கட்சியின் என் மண் என் மக்கள் பயணத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். இதில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், மண்டல பொறுப்பாளரும் மாநில செயலாளருமான கார்த்தியாயினி, மாவட்டத் தலைவர் மனோகரன் மற்றும் சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹீம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, விவசாயிகள் மீது அக்கறை செலுத்துவது மத்திய அரசு தான் அதனால் தான் விவசாயிகளுக்கு மத்திய அரசு ரூ.30 ஆயிரம் வரையில் கௌரவ நிதியாக வழங்கியுள்ளது. இந்தியா முழுவதும் நவோதியா பள்ளிகள் செயல்படுகிறது. ஆனால் தமிழகத்தில் இல்லை. எனவே, தமிழகத்தில் காமராஜர் பெயரில் நவோதயா பள்ளிகளை துவங்க வேண்டும்.” என வலியுறுத்தினார். தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை துவங்கினால், ஏழை குழந்தைகள் படிக்கலாம் எனவும் அவர் கூறினார்.
“பிரதமர் மோடி கலாச்சாரத்தை மீட்டெடுத்து வருகிறார். இந்தியாவின் ஒவ்வொரு கலாச்சாரத்தையும் மீட்டெடுத்து வருகிறார். அயோத்தியில் குழந்தை ராமர் கம்பீரமாக உள்ளார். காஷ்மீர் சட்டபிரிவுகளை எல்லாம் நீக்கி இந்தியா பாரத நாடு என பெருமை அடைந்து வருகிறது.” என அண்ணாமலை கூறினார். 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 400 எம்பிக்களுடன் மோடி மீண்டும் வெற்றி பெறுவார் எனவும் அப்போது அண்ணாமலை ஆருடம் கூறினார்.
பிரதமர் மோடி இன்று அசாம் பயணம்!
கனிம வளக்கொள்ளையால் தமிழக அரசுக்கு ரூ.4 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு என குற்றம் சாட்டிய அண்ணாமலை, “அமலாக்கத்துறை இதுவரையில் ரூ.136 கோடி கைப்பற்றியுள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளனர். கதிர் ஆனந்த் எம்பி இம்மாவட்டத்திற்கு ஒன்றும் செய்யவில்லை. விரைவில் சோதனைக்காக அவர் வீட்டின் கதவை அமலாக்கத்துறை தட்டுவார்கள். இந்தியா கூட்டணி சுயநலவாதிகளால் ஆனது. ராகுல் காந்தி, பரூக் அப்துல்லா மகன், லல்லு மகன் இவர்கள் எல்லாம் வாரிசுகள்; பணக்காரர்கள் ஏழைகளை பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது இண்டியா கூட்டணி சுயநலவாதிகளின் கூடாரம். இந்தியா கூட்டணியை அச்சாரம் போட்ட நிதீஷ்குமாரே வெளியேறிவிட்டார்.” என்றார்.
“தமிழகத்தில் தமிழ்பாடபிரிவில் 55 ஆயிரம் குழந்தைகள் தமிழில் தோல்வி அடைந்துள்ளனர். பிரதாம்ர் மோடி இந்தியா முழுவதும் தமிழை பரப்புகிறார். ஐநா சபையில் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று சொல்கிறார். திமுகவினர் மோடி மீது குற்றசாட்டு வைக்க வேண்டுமென்றால் அவர் தமிழை திணிக்கிறார் என குற்றச்சாட்டு வையுங்கள்.” என அண்ணாமலை கூறினார்.
மேலும், “26764 குடும்பங்கள் மத்திய அரசு மூலம் மோடியின் கான் கீரிட் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. 18528 வீடுகளுக்கு மத்திய அரசின் குடிநீர், இலவச சமையல் எரிவாயும், 5 லட்சம் பேருக்கு மேல் மருத்துவ காப்பீடு எல்லாம் மோடி வழங்கியுள்ளார். உங்களுடைய தவம் வேள்வி எல்லாம் மோடி மீண்டும் வரவேண்டும் என்பதாக இருக்க வேண்டும். வேலூர் பாராளுமன்ற வேட்பாளர் ஏசி சண்முகத்தை வெற்றி பெற வைக்க வேண்டும்.” என்றார்.