கரூர்

கோடை தொடங்கும் முன்னே கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் தண்ணீர்  விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மூன்று கிராம மக்கள் வருவாய் அலுவலரிடம் மனு கொடுத்துள்ளனர்.

கரூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ் தலைமை வகித்தார். அவர் மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். 

இதில், பொரணி, சுப்பாராயரெட்டியூர், அழகாபுரியானூர் ஆகிய மூன்று கிராமங்களை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து, மனு ஒன்றைக் கொடுத்தனர். 

அதில், "பொரணி, சுப்பாராயரெட்டியூர், அழகாபுரியானூர் ஆகிய மூன்று ஊர்களிலும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆழ்குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. தற்போது மோட்டார் பழுதால் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டுவிட்டது. 

காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் விநியோகிக்க கடந்த சில வருடங்களுக்கு முன்பு குழாய்கள் பதிக்கப்பட்டன. ஆனால், குடிநீர் விநியோகிக்க இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கோடைகாலம் தொடங்கும் முன்பே தற்போது குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் இரண்டு அல்லது மூன்று கிலோ மீட்டர் தூரம் சென்று பக்கத்து ஊர்களில் குடிநீர் பிடித்து வர வேண்டிய நிலை உள்ளது. 

எனவே, குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக ஆழ்குழாய் கிணறு மூலம் குடிநீர் விநியோகிக்க வேண்டும். காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்திலும் குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் கூறியிருந்தனர்.

அந்த மனு தொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதி மண்டல வட்டார வளர்ச்சி அதிகாரியை நடவடிக்கை எடுக்க மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ் உத்தரவிட்டார். 

இதனையடுத்து ஆட்சியர் அலுவலகத்தின் வளாகப்பகுதியில் மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். தற்போது முதற்கட்டமாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்க ஏற்பாடு செய்வதாகவும், அதன்பின் ஆழ்குழாய் கிணறு மூலம் குடிநீர் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர். 

இதனை ஏற்றுக் கொண்ட மக்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.