மாடு விற்பனையின் கட்டுப்பாட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யக்கூடாது என நாடு முழுவதும் கடந்த மே மாதம் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதோடு மத்திய அரசின் இந்த உத்தரவு தனிமனித உரிமையை பறிக்கும் செயல் என கூறி நீதிமன்றங்களில் வழக்குகள் குவிந்த வண்ணம் இருந்தன.

அதன்படி மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் செல்வகோமதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த மே 30 ஆம் தேதி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்த நீதிமன்றம் முதலில் மத்திய அரசு பதில் மனுதாக்கல் செய்யும் வரை அரசின் உத்தரவுக்கு தடை விதிப்பதாக உத்தரவிட்டது.

இதையடுத்து மத்திய அரசு வழக்கறிஞர் அவகாசம் கேட்கவே 4 வாரம் காலம் வழக்கை ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற கிளை.

இந்நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மாடு விற்பனைக்கு கட்டுப்பாடு விதித்தது  அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.  

இதைதொடர்ந்து வழக்கு விசாரணையை மேலும் ஒரு வார காலத்திற்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.