because of police misbehave transgender requested to mercy killing
ஈரோடு
போலீஸின் அத்துமீறல்களை தாங்க முடியவில்லை என்றும் எங்களை கருணைக்கொலை செய்ய வேண்டும் என்றும் ஈரோடு ஆட்சியரிடம் திருநங்கைகள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், வீரப்பன்சத்திரம் சின்னவலசு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஓவியா, அனு. திருநங்கைகளான இவர்கள் இருவரும் நேற்று ஈரோடு ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர். அவர்கள் ஆட்சியர் எஸ்.பிரபாகரிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்தனர்.
அந்த மனுவில்,, "பாலியல் தொழில் செய்வதாக கூறி காவலாளர்கள் எங்களை தொந்தரவு செய்கின்றனர். மேலும், திருடுவதாக கூறி எங்களை மிரட்டி பொய் வழக்கு பதிவு செய்கின்றனர். இதனால் நாங்கள் நிம்மதியாக வாழ முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.
ஒவ்வொரு நாளும் உயிருக்கு பயந்து வாழ்ந்து வருகிறோம். எனவே, எங்களை கருணைக்கொலை செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
மேலும், தற்கொலைக்கு முயன்று கையில் வெட்டுக் காயங்களுடன் இருந்த திருநங்கை ஓவியா மற்றும் திருநங்கை அனு ஆகியோர் செய்தியாளர்களிடம், "காவலாளர்கள் எங்களை பாலியல் தொழில் செய்வதாக கூறி மிரட்டுகின்றனர். உண்மையிலேயே பாலியல் தொழில் செய்பவர்களை கண்டுகொள்வதில்லை.
வேலை இல்லாததால் நாங்கள் ஒவ்வொரு கடையாக சென்று வசூல் செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். ஆனால், எங்கள் மீது திருட்டு பட்டம் கட்டி அவதூறு பரப்பி வருகின்றனர்.
தொடர்ந்து எங்கள் மீது பொய் வழக்குகளை போட்டு காவலாளர்கள் மிரட்டி வருகின்றனர். மேலும், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்போவதாகவும் மிரட்டுகிறார்கள்.
காவலாளர்களுக்கு பயந்து தினமும் உயிர் வாழ வேண்டி உள்ளது. இப்படி பயந்து வாழ்வதற்கு பதிலாக கருணைக்கொலை செய்துவிடுங்கள் என்று கூறி ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம்’ என்று அவர்கள் தெரிவித்தனர்.
