மதுரையில் சல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய காவலாளர்களை கண்டித்து இரயில் மறியல் போராட்டம் செய்ய முயன்ற 6 பெண்கள் உள்பட 16 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
சல்லிக்கட்டு நடத்தக்கோரி போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவலாளர்கள் நடத்திய தடியடிக்கு எதிர்ப்புத் தெரிவித்து மதுரையில் கருப்புக் கொடி ஏந்தி இரயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அறிவித்து இருந்தனர்.
சுதாரித்துக் கொண்ட காவலாளர்கள், இரயில் நிலையம் முன்பாக இரண்டு அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு 300-க்கும் மேற்பட்ட காவலாளர்கள் குவிக்கப்பட்டனர்.
இரயில் நிலையம் முன்பாக தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்படாமல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இரயில் நிலையத்துக்குச் செல்லும் பயணிகள் சோதனைக்கு பின்பே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
இரயில் நிலைய நடைமேடைகளிலும் காவலாளர்கள் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றியது போல விழ்ப்புடன் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்), மக்கள் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், ஆதித்தமிழர் கட்சி உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்டோர் கட்டபொம்மன் சிலை முன்பாக திரளாகக் கூடினர்.
அங்கிருந்து மீ.த.பாண்டியன் தலைமையில் இரயில் நிலையத்துக்கு ஊர்வலமாகச் செல்ல முயன்றனர். அப்போது அங்கு காத்திருந்த காவலாலர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். அவர்களுக்கு அனுமதி மறுத்து கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.
இருந்தும், தடையை மீறிச்செல்ல முயன்ற 6 பெண்கள் உள்பட 16 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
இந்தச் சம்பவத்தால் அப்பகுதி பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.
