Asianet News TamilAsianet News Tamil

நீங்க எவ்வளவு எடுக்கனும்னு வங்கி தான் நிர்ணயிக்கும்; ஏனெனில், வங்கியில் பணம் இல்லை…

bank only-decied-how-much-you-should-take
Author
First Published Nov 30, 2016, 10:50 AM IST


ஈரோடு

வங்கிகளில் பணம் இல்லாத காரணத்தால். சம்பள பணம், ஓய்வூதிய தொகை போன்றவற்றை எடுக்க வங்கியில் கூடும் மக்களுக்கு எவ்வளவு பணம் எடுக்க வேண்டும் என்று வங்கிதான் நிர்ணயிக்கிறது.

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் மக்களிடையே பணப்புழக்கம் குறைந்தது. இந்தியா ரூபாயும் வீழ்ச்சியைக் கண்டது.

பொதுமக்கள் தங்களிடம் உள்ள பணத்தை மாற்றிக்கொள்ள வங்கிகள், தபால் நிலையங்களுக்கு சென்றனர். இதனால் அங்கு மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கடந்த 10–ஆம் தேதியில் இருந்து வங்கி ஊழியர்களுக்கு வேலைகள் அதிகமாக இருந்தது.

பெரிய கடைகள், ஷோரூம்களில் பொதுமக்கள் கிரெடிட், டெபிட் அட்டைகளை பயன்படுத்தி பொருட்களை வாங்கினாலும், காய்கறி, பழங்கள், பலசரக்கு போன்ற அன்றாட பொருட்களை வாங்க முடியாமல் பெரிதும் சிரமப்பட்டனர். சாலையோர வியாபாரிகளுக்கு அதீத பாதிப்பு இருந்தது. எனவே அரசியல் கட்சியினர், வணிகர் சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வங்கிகளில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் கேட்கும் பணத்தை வழங்க முடியாமல் சிரமம் ஏற்பட்டது. ஈரோட்டில் உள்ள சில வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட பணம் மட்டுமே வழங்கின.

பெரும்பாலான இடங்களில் உள்ள ஏ.டி.எம். மையங்கள் பூட்டியே கிடப்பதால் பொதுமக்கள் தங்களது வங்கி கணக்கில் பணம் இருந்தும் எடுக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

கடந்த வாரம் வங்கிகளில் பணத்தை எடுக்கவும், சேமிப்பு கணக்கில் பணத்தை செலுத்தவும் பொதுமக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.

இந்த நிலையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுவிட்டதால் பணத்தை எடுக்க செவ்வாய்க்கிழமை வங்கிகளில் கூட்டம் அதிகமாக இருந்தது.

ஈரோடு தலைமை ஸ்டேட் வங்கியில் காலை 9 மணியில் இருந்தே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் ஓய்வூதியர்களாக இருந்தனர். ஏ.டி.எம். மையங்கள் முழுமையாக செயல்படாமல் முடங்கியதால் அனைத்து வங்கிகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இதுகுறித்து வங்கி அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘ஓய்வூதியம் வழங்கப்பட்டதால் சேமிப்பு கணக்கில் இருந்து பணத்தை எடுக்கவரும் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதுவரை வாடிக்கையாளர்கள் கேட்கும் பணம் முழுமையாக வழங்கப்பட்டு வருகிறது.

இனிமேல், ஓய்வூதியர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்த்ததைவிட வங்கியில் பணம் குறைவாக இருப்பதால் பொதுமக்கள் கேட்கும் பணத்தை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பணத்தட்டுபாடு ஏற்பட்டதால் குறிப்பிட்ட பணம் நிர்ணயிக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் வழங்கப்படுகிறது. மேலும், டிசம்பர் மாதம் பிறக்க உள்ளதால் சம்பளம் வந்தவுடன் பணத்தை எடுக்க பொதுமக்கள் பலர் வங்கிகளுக்கு வருவார்கள். எனவே இந்த வாரம் வங்கிகளில் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.’’, என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios