கன்னியாகுமரி

நாகர்கோவில் பேக்கரி ஊழியர் ஊருக்குச் சென்றிருந்தபோது அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் இரண்டு சவரன் நகைகளைக் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வடசேரி வணிகர் தெருவைச் சேர்ந்தவர் அமீர் அராபத் (37). இவர் அப்பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் ஊழியராக வேலை செய்கிறார்.

அவர் குடும்பத்துடன் திட்டுவிளையில் உள்ள மாமனார் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில் நேற்று காலை, அவர் வீட்டு கதவு உடைந்து கிடப்பதை கண்டு அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்தனர்.

இதுகுறித்து அவர்கள், அமீர் அராபத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், வடசேரிக்கு வந்த அவர், வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோ கதவு திறந்து கிடந்தது. அதில் இருந்த துணிகள், பொருட்கள் எல்லாம் கீழே சிதறி கிடந்தன.

மேலும், பீரோவில் வைத்திருந்த அவருடைய குழந்தைகளின் கம்மல், காப்பு உள்ளிட்ட இரண்டு சவரன் தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து வடசேரி காவல் நிலையத்தில் அமீர் அராபத் புகார் அளித்ததன்பேரில் காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்

கடந்த சில நாள்களுக்கு முன்புதான் வடசேரி பரதர் தெருவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் நாகராஜ் என்பவர் வீட்டு கதவை உடைத்து, மூன்று சவரன் நகை, 17 ஆயிரம் ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

அடுத்தடுத்து நடந்து வரும் இதுபோன்ற சம்பவங்களால் அந்தப் பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.