ayyakannu talks about edappadi palanisamy

முதலமைச்சர் அளிக்கும் நிவாரண நிதி எங்களுக்கு வந்து சேர்வதில்லை எனவும், நாங்கள் அப்போதைக்கு அங்கிருந்து கிளம்பினால் போதும் என்ற நோக்கில் எடப்பாடி பழனிசாமி செயல்படுவதாகவும் விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், நதிநீர்களை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சில மதங்களுக்கு முன்பு தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

41 நாட்களாக நடைபெற்ற இந்த போராட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளவே இல்லை. அப்போது அங்கு பிரதமரை சந்திக்க வந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் வறட்சி நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என வாக்குறுதி அளித்தார்.

இதனால் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர். ஒருமாதகாலம் கழித்து விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க சென்னை சென்றனர். ஆனால் பார்க்கமுடியவில்லை.

இதையடுத்து கரும்பு விவசாயிகளுக்கு தமிழக அரசு வறட்சி நிவாரணம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், விவசாயசங்க தலைவர் அய்யாக்கண்ணு டெல்லியில் 27 மாநில விவசயாக சங்க தலைவர்கள் கலந்து கொள்ளும் மாநாட்டிற்கு செல்கிறார். அதற்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது முதலமைச்சர் அளிக்கும் நிவாரண நிதி எங்களுக்கு வந்து சேர்வதில்லை எனவும், நாங்கள் அப்போதைக்கு அங்கிருந்து கிளம்பினால் போதும் என்ற நோக்கில் எடப்பாடி பழனிசாமி செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

வறட்சி நிவாரணமாக 21,078 கோடி ரூபாய் தமிழக அரசு கேட்டதாகவும், ஆனால் மத்திய அரசு ஒரு பைசா கூட கொடுக்க வில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

நிலத்தை விற்று வங்கி கடனை செலுத்துங்கள் என வங்கி அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதாகவும் விவசாயிகள் வீட்டு பெண்களின் தாலி கூட அடமானத்திற்கு சென்று விட்டதாகவும் தெரிவித்தார்.

விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைத்தால் கடனை தள்ளுபடி செய்ய கோரி நாங்கள் கேட்க மாட்டோம் எனவும், விளை பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

மேலும், 140 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் வறட்சி நிலவுவதாகவும், கடனை கேட்டு விவசாயிகளுக்கு நெருக்கடி கொடுக்க கூடாது என்று ரிசர்வ் பேங்க் உத்தரவிட்டும் மாநில வங்கிகள் அதை மதிப்பதில்லை எனவும் தெரிவித்தார்.

முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோதும் சரி, பன்னீர்செல்வம் இருந்தபோதும் சரி, எடப்பாடி பழனிச்சாமி இருந்தபோதும் சரி அவர்கள் அறிவித்த நிவாரணங்கள் விவசாயிகளை வந்து சேர்வதில்லை என குற்றம் சாட்டினார்.

மத்திய அரசின் அராஜக போக்கினை கண்டித்து நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் எனவும் அய்யாகண்ணு தெரிவித்தார்.