தென்காசி அருகே நாட்டு மருந்து சாப்பிட்ட 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மலையான் தெருவை சேர்ந்தவர் முத்துப்ண்டி (50). நாட்டு வைத்தியரான இவர் தென்காசி அருகே உள்ள அழகப்பபுரத்தில் வசித்து வருகிறார். அங்கு உள்ள தோட்டம் ஒன்றில் நாட்டு மருந்து தயாரித்து மக்களுக்கு வழங்கி வருகிறார்.
அல்சர், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்டவைகளுக்கு நாட்டு மருந்து வழங்கி வந்தார். தென்காசியின் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இவரிடம் மருந்து வாங்கி வந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை முத்துப் பாண்டியிடம் மருந்து சாப்பிடுவதற்காக சிலர் வந்திருந்தனர். அவர்களுக்கு நாட்டு மருந்து கொடுத்துள்ளார் முத்துப்பாண்டி. மருந்து வாங்கியவர்கள் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே மயங்கி விழுந்துள்ளனர். அதே சமயத்தில் மருந்து வழங்கிய நாட்டு மருத்துவர் முத்துப்பாண்டியும் மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து, மயங்கி விழுந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களைச் மருத்துவர் சோதித்துப் பார்த்தார். அப்போது நாட்டு மருத்துவர் முத்துப்பாண்டி, இருளாண்டி உள்ளிட்ட 3 பேர் மரணமடைந்துவிட்டதாக கூறியுள்ளனர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
