விசாரணை கைதி விக்னேஷ் உடலில் காயங்கள் காணப்பட்டதாக உடற்கூறாய்வு அறிக்கையில் திடுக்கிடும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விசாரணை கைதி விக்னேஷ் உடலில் காயங்கள் காணப்பட்டதாக உடற்கூறாய்வு அறிக்கையில் திடுக்கிடும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச்செயலக குடியிருப்பு காவல் நிலைய போலீசார் புரசைவாக்கம் கெல்லிஸ் சிக்னலில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது ஆட்டோவில் வந்த இளைஞர்கள் 2 பேரை மடக்கி விசாரித்துள்ளனர். அப்போது அவர்கள் போலீசாரை தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களிடம் கத்தி, கஞ்சா பொட்டலம் இருந்திருக்கிறது. இதையடுத்து இருவரையும் விசாரணைக்காக தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். திருவல்லிக்கேணியை சேர்ந்த சுரேஷ் என்ற 28 வயது இளைஞரும், பட்டினபாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற 28 வயது இளைஞரும் தான் போலீசாரால் பிடித்து செல்லப்பட்டிருக்கிறார்கள். பிடித்துச் சென்றவர்களை இரவில் விசாரணை நடத்தியதாக சொல்லப்பட்ட நிலையில் விக்னேஷ்க்கு காலையில் திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருக்கிறது.

உடனே அவரை போலீசார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விக்னேஷ் உயிரிழந்திருக்கிறார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினார். இதனை தொடர்ந்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்ற உத்தரவிட்டார். இந்த வழக்கில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது. இதனிடையே காவல் நிலையத்தில் இருந்து தப்பியோட முயலும் விக்னேசை போலீஸ் பிடிப்பது போன்ற சிசிடிவி காட்சிகளும் வெளியாகின. இதற்கிடையே, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த விசாரணைக் கைதி விக்னேஷ் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், விசாரணை கைதி விக்னேஷ் உடலில் 13 இடங்களில் காயம் இருந்ததாக உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்னேஷின் உடல் சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில், உடல்கூறாய்வு செய்யப்பட்டது. ஆய்வில் நிறைவு பெற்ற நிலையில் சிபிசிஐடி, விக்னேஷ் குடும்பத்தினரிடம் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை உடற்கூறாய்வு அறிக்கையை வழங்கியது. அந்த அறிக்கையில், விசாரணை கைதி விக்னேஷ் உடலில் 13 இடங்களில் காயம் இருந்தது. விக்னேஷின் தலை, கண் புருவம், தாடை உள்ளிட்ட உடலின் 13 இடங்களில் காயம் உள்ளது. வலது காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. மேலும், ரத்தக் கட்டுகள் காணப்படுவதாகவும், லத்தி போன்ற ஆயுதத்தால் தாக்கியதற்கான அடையாளங்களும் உடலில் காணப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.