நாகப்பட்டினம்

நாகப்பட்டினத்தில் நடுரோட்டில் ஆட்டோ கவிழ்ந்ததில் அதில பயணித்த 5 பெண்கள் உள்பட ஓட்டுநர் மற்றும் சைக்கிளில் சென்ற சிறுவன் என 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் ஆரியநாட்டு தெருவைச் சேர்ந்த சிவக்குமார். மனைவி கலா (35), ஆறுமுகம் மனைவி சுமித்ரா (35), புஷ்பராஜ் மனைவி மகேஸ்வரி (30), இரத்தினவேல் மனைவி ஜெயப்பிரியா (35), ரமேஷ் மனைவி இன்பவள்ளி (36) ஆகியோர் நாகப்பட்டினம் மீன் இறங்கு தளத்திலிருந்து மீன்களை வாங்கி வந்து வாஞ்சூர் பகுதியில் விற்பனை செய்வது வழக்கம்.

இவர்கள் நேற்று காலையும் வழக்கம்போல மீன்களை வாங்கிக்கொண்டு அவற்றை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு விற்பதற்காக வாஞ்சூருக்கு சென்று கொண்டிருந்தனர்.

ஆட்டோவை வாஞ்சூர் ஆசாரி தெருவை சேர்ந்த பக்கிரிசாமி மகன் நாகராஜ் (36) என்பவர் ஓட்டினார். ஆட்டோ நாகூர் புதிய பேருந்து நிலையம் அருகே வந்தது.

அப்போது முன்னால் சைக்கிளில் சென்ற வடக்கு பால்பண்ணைச்சேரி கீழதெருவைச் சேர்ந்த சிவகுமார் மகன் இசால் (17) திடீரென சாலையை கடந்துள்ளான். இதில் தடுமாறிய நாகராஜ் ஆட்டோவை பிரேக் அடித்து நிறுத்த முயற்சித்துள்ளார்.

ஆனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ முன்னால் சென்ற சைக்கிளில் மோதியது. அதுமட்டுமின்றி நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் சைக்கிளில் சென்ற சிறுவன் இசால், ஆட்டோவில் வந்த மீனவ பெண்கள் ஐந்து பேர் மற்றும் டிரைவர் என ஏழு பேரும் படுகாயம் அடைந்தனர். மேலும், ஆட்டோவில் கொண்டு வந்த மீன்களும் சாலையில் கொட்டி சிதறின.

இதனைப் பார்த்து அதிர்ந்த அக்கம்பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் காவல் ஆய்வாளர் குலோத்துங்கன், உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

இதுகுறித்து வழக்குபதிந்த நாகூர் காவலாளர்கள் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.