சென்னை கொடுங்கையூர் மீனாம்பாள் சாலையில் நித்யானந்தம் (55) என்பவருக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. இங்கு தனியார் வங்கிகளின் 3 ஏடிஎம் மையம், ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான சிப்ஸ் கடை உள்பட 7 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.

இங்குள்ள ஒரு ஏடிஎம் மையத்தின் உள்பக்கத்தை, தனி அறையாக அமைத்து, அங்கு ஆனந்தன் கடைக்கு தேவையான சிப்ஸ் தயாரிக்கும் இடம் வைத்துள்ளனர். இங்கு 4 பேர் வேலை செய்கின்றனர்.

நேற்று இரவு சிப்ஸ் தயாரிக்கும் வேலை முடிந்து ஊழியர்கள், கடையை பூட்டி கொண்டு வீட்டுக்கு சென்றனர். அப்போது, அங்குள்ள சிலிண்டரை சரியாக மூடவில்லை. இதனால், கியாஸ் கசிவு ஏற்பட்டு, இரவு சுமார் 11 மணியளவில் திடீரென தீப்பிடித்தது.

இதை அறிந்ததும், அப்பகுதி மக்கள் ஏராளமானோர் திரண்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தீ கொழுந்துவிட்டு எரிந்ததும், அங்கிருந்த மக்கள் அணைக்க முயன்றனர். ஆனால், முடியவில்லை.

தகவலறிந்து கொடுங்கையூர் போலீசார், எழில்நகர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் வந்து தீயை அணைக்க முயன்றனர். முன்னதாக சிப்ஸ் கடையின் கதவு பூட்டை உடைத்து உள்ளே நுழைய முயன்றபோது, அங்கிருந்த சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது.

இதில், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தீயணைப்பு வீரர் ஏகராஜ் (52) என்பவர் சம்பவ இடத்திலேயே தீயில் சிக்கி பலியானார். அவருடன் இருந்த சென்னையை சேர்ந்த தீயணைப்பு வீரர் ராஜதுரை என்பவர் படுகாயம் அடைந்தார்.

மேலும், அவர்களுடன் இருந்த கொடூங்கையூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர்கள் புருஷோத்தமன், அந்தோணி, ஜெயபிரகாஷ், எபிநேசன், அரிகரபுத்திரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் உள்பட 47 பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு, தீயை அணைத்தனர். இதற்கிடையில் படுகாயமடைந்த 10 ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும், 37 பேர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு நடந்த இந்த திடீர் தீவிபத்தில், சிப்ஸ் தயாரிக்கும் அறையின் அருகில் உள்ள ஏடிஎம் மையமும் எரிந்து நாசமானது. அதில், இருந்த சுமார் ரூ.5 லட்சம் எரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.