குன்னம், 

பெரம்பலூரில், மர்மமான முறையில் தம்பி வீட்டில் தீ பிடித்ததில், வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்து அண்ணன் வீட்டில் விழுந்தது. இதில், அண்ணன் வீடும் தீப்பற்றி எரிந்தது. இருவரும் உடைமைகளை இழந்து வாடுகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூர் அருகே உள்ள நன்னை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன்கள் உதயசூரியன், ஆறுமுகம். இருவருக்கும் திருமணம் ஆகி தனித்தனி வீட்டில் வசித்து வருகின்றனர்.

உதயசூரியனும், ஆறுமுகமும் விவசாயிகள். வழக்கம் போல் நேற்று, இருவர் குடும்பத்தாரும் வயல் வேலைக்காகச் சென்றுள்ளனர்.

அப்போது மதியம் திடீரென ஆறுமுகம் வீட்டில் தீப்பற்றி எரியத் தொடங்க உள்ளது. அப்போது அவர் வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து அருகில் இருந்த உதயசூரியன் வீட்டில் விழுந்தது. இதில் உதயசூரியன் வீடும் சேர்ந்து எரிய தொடங்கியது.

இதனைக் கண்ட கிராம மக்கள் அங்கு விரைந்துச் சென்று குடம் மற்றும் வாளிகளில் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வேப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்தில் உதயசூரியன் வீட்டில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலி, 62 ஆயிரம் ரொக்கம் உள்பட வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் ஆறுமுகம் வீட்டில் இருந்த 38 பவுன் தங்கம் உட்பட ரூ, 1 இலட்சத்து 36 ஆயிரம் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசமாயின.

இச்சம்பவம் குறித்து குன்னம் காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்.

மர்மமான முறையில் ஏற்பட்ட இந்த தீயால், உடைமைகளை இழந்து வாடுகின்றனர் உதயசூரியன் மற்றும் ஆறுமுகம்.

இந்த சம்பவத்தால் அந்தப் பகுதி மக்கள் பதற்றத்துடன் காணப்பட்டனர்.