At the competent rate the tea must be integrated in the provincial district in the state - the request of the collector ...
தேனி
கல்வி தேர்ச்சி விகிதத்தில் தேனி மாவட்டத்தை மாநில அளவில் முதன்மையான மாவட்டமாக கொண்டு வர அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று தேனி மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பள்ளிக்கல்வித் துறை சார்பில், தேனி மாவட்டத்தில் பணியாற்றும் அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோருக்கு ஊக்குவிப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
தேனி நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடந்த இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம் தலைமை வகித்தார்.
அப்போது அவர் பேசியது: "எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் கடந்த 2015-16-ஆம் கல்வியாண்டில் தேனி மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 96.5 சதவீதமாக இருந்தது. 2016-17-ஆம் கல்வியாண்டில் இது 97.1 சதவீதமாக உயர்ந்தது.
அதேபோல, பிளஸ்-2 அரசுப் பொதுத் தேர்வில் 2015-16-ஆம் கல்வியாண்டில் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 95.1 சதவீதமாக இருந்தது. 2016-17-ஆம் கல்வியாண்டில் 95.9 சதவீதமாக அதிகரித்தது.
மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்துவது பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் முக்கிய பணியாகும்.
எழுத்துத் திறன் தேர்வு, வாசிப்புத் திறன் தேர்வுகள் அடிக்கடி நடத்தி மாணவ, மாணவிகளின் திறனை வெளிப்படுத்த வேண்டும்.
பள்ளி கல்வித் துறை அலுவலர்கள், தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவிகளின் திறனை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தையும், மாவட்டத்தை மாநில அளவில் முதன்மையான மாவட்டமாக கொண்டு வரவேண்டும் என்பதனையும் கருத்தில் கொண்டு அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்" என்று அவர் பேசினார்.
