நாகையில் 50 மீட்டர் அளவில் கடல் உள்வாங்கியதால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னைக்கு தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து புயல் சின்னமாக மாறியுள்ளது.

இந்த புயலுக்கு ‘நாடா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் நாளை (வெள்ளிக்கிழமை) காலை சென்னை - வேதாரண்யம் இடையே கடலூர் அருகே கரையை கடக்கும் என்றும், இதனால் கடலோர மாவட்டங்கள் உள்பட பல்வேறு இடங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து நாகை துறைமுகத்தில் புதன்கிழமை மாலை 6.15 மணியளவில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டது. புயல் சின்னம் காரணமாக கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரைக்குத் திரும்பினர்.

மேலும், நாகையில் புதன்கிழமை காலை வழக்கம்போல் கடுமையான பனி பொழிவு இருந்தது. அதைத் தொடர்ந்து வெயில் அடித்தது.

பின்னர் மாலை 3 மணியளவில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை. மாலையில் இலேசான காற்று வீசியது. இதனால் கடல் சற்று சீற்றமாக காணப்பட்டது.

மேலும், நாகை கலங்கரை விளக்கம் பகுதியில் கடல் சுமார் 50 மீட்டர் அளவில் உள்வாங்கியது. இதனால் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.