காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில், மாற்றுச் சான்றிதழ்களை கேட்ட மாணவர்களை ரௌடிகளை வைத்து மிரட்டிய தனியார் கல்லூரி மீது மாணவர்கள் புகார் அளித்ததன்பேரில் காவல்துறை வழக்குப் பதிந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், சோத்துப்பாக்கத்தில் தனியார் "ஹோட்டல் மேனேஜ்மென்ட்' கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது.

இங்கு, முறையான அடிப்படை வசதிகள் இல்லை. கல்வியை முடித்த மாணவர்களுக்கு கல்லூரியில் படித்ததற்கான மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்பது போன்ற பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து படிப்பை முடித்துவிட்டு வெளியே செல்ல உள்ள 15 மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டு உள்ளனர்.

அதற்கு கல்லூரில் நிர்வாகம் உரிய பதில் எதுவும் அளிக்காமல் மாணவர்களை ரெளடிகள் மூலம் மிரட்டியுள்ளது.

இதனால், அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் கல்வி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் நேற்று புகார் மனு அளித்தனர்.

இந்த புகாரைப் பெற்ற உதவி ஆய்வாளர் பத்மாவதி, கல்லூரி நிர்வாகத்தின் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.