As soon 70 quarries in Tamilnadu - government sudden plan
தமிழகத்தில் உள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலையகளில் மணல் கொள்ளை அதிகரித்தது. இதனால், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன் அனைத்து மணல் குவாரிகளையும் அரசு மூட உத்தரவிட்டது. இதனால், மணல் தட்டுப்பாடு ஏற்பட்டது. மணல் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அரசுக்கு பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.
இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக 7 மணல் குவாரிகளுக்கு மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கி இருப்பதாக தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி திருச்சி, கரூர், விழுப்புரம், வேலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் புதிய குவாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிதாக 70 புதிய மணல் குவாரிகளை தொடங்கி மணல் தட்டுப்பாட்டை போக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மணல் குவாரிகள் 3 ஆண்டுகள் செயல்படும்.
புதிய மணல் குவாரிகள் தொடங்கப்படுவது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
புதிதாக திறக்கப்படும் மணல் குவாரிகள் 25 ஏக்கர் பரப்பளவு கொண்டதாக இருக்கும். இங்கு 30 முதல் 40 அடி ஆழம் வரை மணல் இருக்கும். கொள்ளிடத்தில் உள்ள குவாரிகளில் அதிக மணல் கிடைக்கிறது. காவிரி ஆற்றிலும் கணிசமான அளவுக்கு மணல் உள்ளது.
மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு ஆணையத்தின் அனுமதி கிடைத்ததும் உடனுக்குடன் புதிய மணல் குவாரிகள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய மணல் குவாரிகள் அனுமதி பெற பல்வேறு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியதிருப்பதால் 2 முதல் 3 மாதங்கள் வரை ஆகலாம்.
தற்போது 21 மணல் குவாரிகள் செயல்படுகின்றன. அவற்றில் இருந்து தினமும் 7 ஆயிரம் யூனிட் மணல் எடுக்கப்படுகிறது. இதன் காரணமாக மணல் தட்டுப்பாடு படிப்படியாக குறைந்து வருகிறது என்றார்.
