ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் ஆஜராகாததற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு தராவிடில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பல்வேறு தரப்பில் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் உரிய விசாரணை நடத்தி, சந்தேகங்களைப் போக்கும் வகையில் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இதில் சசிகலா உறவினர்கள், போலீஸ் உயரதிகாரிகள், அப்பல்லோ மருத்துவர்கள், முன்னாள் தலைமை செயலாளர்கள், நர்சுகள் உள்ளிட்ட பலருக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி விசாரைண நடத்தி வருகிறது. 

இதன் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த அப்பல்லோ மருத்துவமனையில், ஆறுமுகசாமி ஆணையம் சார்பில் நேரில் ஆய்வு நடத்தியது. இந்நிலையில், இதுவரை 30-க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலான மருத்துவர்கள், செவிலியர்கள் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தனர்.  

இதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இம்மாதம் 5, 6, 7 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகுமாறு, அப்பல்லோ மருத்துமனையின் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு குறித்த நேரத்தில் ஆஜராக வேண்டும் என அப்பல்லோ நிர்வாகத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், அவர்கள் யாரும் குறிப்பிட்ட தேதியில் ஆஜராகவில்லை. இதே நிலை நீடித்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.