வேலூர்,
சல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் வேண்டும் என்று அறவழியில் போராடிக் கொண்டிருந்த போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியும், குண்டு கட்டாக தூக்கியும் போராட்டத்தைக் கலைத்து வருகின்றனர் காவலாளர்கள். இதற்கு போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரியும் கடந்த 18-ந் தேதி முதல் வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் இளைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் அணி அணியாக வந்து போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பி ஆரவாரத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நேற்று முன்தினம் வாயில் கருப்பு துணியை கட்டி மௌன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் தமிழக அரசு சல்லிக்கட்டு போட்டி நடத்த அவசர சட்டம் கொண்டு வந்தது. இருப்பினும் இளைஞர்கள் சல்லிக்கட்டு போட்டிக்கு நிரந்தர சட்டம் கொண்டு வந்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து இளைஞர்கள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பியவாறு விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் நேற்றும் தொடர்ந்தது. நேரம் செல்ல, செல்ல இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வந்தது.
போராட்டத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நேற்றுவரை காவலாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், வேலியே பயிரை மேய்ந்ததுபோல பாதுகாப்பு கொடுத்த காவலாளர்களே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தியும், குண்டு கட்டாக தூக்கியும் போராட்டக் களத்தை விட்டு வெளியேற்றினர்.
போராட்டக் களத்தில் உள்ள பெண்கள், குழந்தைகள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் கண்ணீர் விட்டு அழுதுக் கொண்டிருக்கின்றனர். தமிழக அரசிற்கும், காவலாளர்களுக்கும் போராட்டக் களத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தங்களது கண்டனைத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர்.
