ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதன்மை குற்றவாளியாகக் கருதப்பட்ட ரௌடி நாகேந்திரன் உயிரிழக்கவில்லை, அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அவரை தமிழக அரசு தப்பவைத்துள்ளதாக நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகித்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2025ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஏ1 குற்றவாளியாக ரௌடி நாகேந்திரன் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் கடந்த அக்டோபர் 9ம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து நாகேந்திரனின் உடல் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தமிழக காவல் துறை வசம் உள்ள வழக்கு தொடர்பான ஆவணங்கள் தற்போது வரை சிபிஐயிடம் வழங்கப்படவில்லை. இதனை காரணம் காட்டி கைது செய்யப்பட்ட 3 பேர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கில் இடையீட்டு மனுதாரராக உள்ள ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் கீனோஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கை காவல்துறை முறையாக விசாரணை நடத்தவில்லை என்பதால் சிபிஐ வசம் மாற்றப்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கு ஜாமீன் வழங்கும் பட்சத்தில் சாட்சிகள் கலைக்கப்படலாம் என்று முறையிடப்பட்டது.
மேலும் ரௌடி நாகேந்திரன் உயிரிழக்கவில்லை. பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அவரை அரசு தப்பிக்கவைத்துவிட்டதாக ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் குற்றம் சாட்டி உள்ளார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட விசாரணையை 10ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
