Armed Forces police hit the cheek on a motorcycle with his wife People stoke people to take action ...

திருப்பூர்

திருப்பூரில், மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் வந்தவரை கன்னத்தில் அடித்த ஆயுதப்படை காவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் முனிராஜ் (29). இவருடைய மனைவி கீதா (25). இவர்கள் இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் திருப்பூரில் இருந்து குமார்நகர் வழியாக 60 அடி சாலையில் சென்றுக் கொண்டிருந்தனர்.

அப்போது, எதிரே காவல் வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த வாகனம் முனிராஜ் சென்றுக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் மீது மோதுவதுபோல வந்ததால் பயத்தில் முனிராஜ் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார். பின்னர், காவல் வாகனத்தை ஓட்டி வந்த காவலரிடம், ‘எதிரே வரும்போது மெதுவாக வர வேண்டியதுதானே’ என்று கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த காவலர், வாகனத்திலிருந்து இறங்கிவந்து முனிராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் இந்த வாக்குவாதம் முற்றி தகராறாக மாறியது. அப்போது முனிராஜின் கன்னத்தில், வாகனத்தில் வந்த காவலர் அடித்துள்ளார். இதில் முனிராஜிக்கு காயம் ஏற்பட்டது. முனிராஜியும் பதிலுக்கு தாக்கியுள்ளார். இருவரும் நடுரோட்டில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகளும் ஆங்காங்கே தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு அங்கு வந்ததால் சிறிது நேரத்தில் மக்கள் கூட்டம் அதிகமாகிவிட்டது. இதனால், அந்த காவலர், வாகனத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார். ஆனால் மக்கள் சூழ்ந்துகொண்டு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், எதையும் பொருட்படுத்தாமல் வாகனத்தை எடுத்து கொண்டு புறப்பட்டு சென்று விட்டார்.

அந்த காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வாகன ஓட்டிகளும், மக்களும் அங்கு திரண்டு திடீரென அவர்கள் குமார் நகர் தீயணைப்பு நிலையத்திற்கு எதிரே அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தால் வாகனங்கள் குமார்நகர் வரை அணிவகுத்து நின்றது. இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பூர் வடக்கு காவலாளர்கள் மற்றும் உதவி ஆணையர் அண்ணாத்துரை ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவலாளர்கள் உறுதியளித்ததை தொடர்ந்து மக்கள் சாலை மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்தப் போராட்டத்தினால் அவினாசி சாலையில் 30 நிமிடங்களுக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து காவலாளர்கள் முனிராஜையும் அவருடைய மனைவி கீதாவையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்ததில் முனிராஜை தாக்கியவர் திருப்பூர் மாவட்ட ஆயுதப்படையில் காவலாராக பணியாற்றும் அன்பழகன் என்பது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து இதுகுறித்து ஆயுதப்படை காவலர் அன்பழகனிடமும், காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.