Appointment of Additional Physicians at Government Hospital - Resolution at village assembly meeting
அரியலூர்
செந்துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமித்து 24 மணி நேரம் மருத்துவமனை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியம், ஆதிச்சனூர் கிராமத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார்.
இந்தக் கூட்டத்தில் ஆட்சியர்ம் "எதிர்வரும் கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்கிட முன்னெச்சரிக்கை மேற்கொள்ளுதல், குடிநீரை சிக்கனமாகவும், முறையாகவும் பயன்படுத்திடவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கிராம வளர்ச்சி திட்டம், அந்தியோதயா இயக்கம் மற்றும் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற ஊராட்சிகளாக மாற்றிட தொடர்ந்து தனிநபர் கழிப்பறை பயன்பாட்டினை ஊக்கப்படுத்துதல், திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விவரிக்கப்பட்டது.
மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 2017-18-ஆம் ஆண்டிற்கான தொழிலாளர் வரவு, செலவு திட்ட அறிக்கை ஒப்புதல் பெறப்பட்டு, நடப்பாண்டிற்கு இவ்வூராட்சியில் செயல்படுத்தும் பணிகள், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலமாக திறன் மேம்பாடு பயிற்சி அளித்தல், மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைத்தல், கடன் வழங்குதல், தனிநபர் கழிவறை கட்ட ஊக்கப்படுத்துதல் ஆகிய பொருள்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
குழந்தை கடத்தல், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் மற்றும் பெண்களை வணிக ரீதியாக கடத்துதல், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் போன்ற பிரச்சனைகளை களைவது குறித்து விரிவாக இக்கிராம சபைக்கூட்டத்தில் எடுத் துரைக்கப்பட்டது" என்றுகூறினார்.
இதில் திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) லோகேஷ்வரி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிசாமி, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ஹேமசந்த்காந்தி, தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தானம், செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்..
செந்துறை தாலுகாவில் உள்ள 30 கிராம பஞ்சாயத்துகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. அதன்படி, செந்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இதற்கு ஒன்றிய மேற்பார்வையாளர் சண்முகம் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தீர்மானங்கள் வாசித்தார்.
பொன்பரப்பி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் இந்துமதி கலந்து கொண்டு மக்களுக்கு வழங்கப்படும் இலவச மருத்துவத்தை எவ்வாறு பயன்படுத்துவது குறித்தும் மருத்துவ காப்பீடு திட்டத்தில் அனைவரும் பயன்பெறும் வழிமுறைகள் குறித்து விளக்கி பேசினார்.
இந்தக் கூட்டத்தில், "அரியலூர் மாவட்டத்தில் உள்ள 4 தாலுகாக்களில் செந்துறை தாலுகாவில் மட்டும் கல்லூரி இல்லை. அதனால் இந்த பகுதியில் உள்ள பெண்கள் மேற்படிப்பு படிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகையால் பெண்களின் நலன் கருதி செந்துறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,
செந்துறை அரசு மருத்துவமனை போதிய மருத்துவர்கள் இல்லாததால் சரிவர இயங்கவில்லை. ஆகையால் கூடுதல் மருத்துவர்களை நியமனம் செய்து 24 மணி நேரம் மருத்துவமனை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்" உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
