AP Government two years since the 20 Tamils shot and killed History more funding History and justice
திருவண்ணாமலை
ஆந்திர வனப்பகுதியில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு நிவாரணத் தொகையும், சுட்டுக் கொன்ற வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க சிபிஐ விசாரணையும் கேட்டு இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் நல்ல தீர்வு வந்த பாடில்லை என்று சுட்டுக் கொல்லப்பட்ட குடும்பத்தினர் வேதனை தெரிவித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே படவேடு வேட்டகிரிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சசிகுமார், முருகன், பெருமாள், முருகாபாடி மூர்த்தி, முனிசாமி, காந்திநகர் மகேந்திரன், காளசமுத்திரம் பழனி.
இவர்கள் ஏழு பேர் உள்பட 20 பேரை கடந்த 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி திருப்பதி காட்டில் செம்மரம் வெட்டி கடத்தியதாக ஆந்திர மாநில வனத்துறையினர் கொடூரமாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
இப்படி கொடூரமாக 20 பேரை சுட்டுக் கொன்ற ஆந்திர மாநில வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், சி.பி.ஐ. விசாரனை மற்றும் நிவாரண உதவி கோரியும் ஆந்திர அரசிற்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். இச்சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது, இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை அந்த மாநில அரசு.
பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்கள் சார்பில் சசிகுமாரின் மனைவி முனியம்மாள் என்பவர் கொடுத்த புகார் தொடர்பான வழக்கு கீழ்திருப்பதி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் நடைபெற்று நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் ஆகியும் இந்த வழக்கில் எவ்வித தீர்வும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இன்னும் கிடைக்கவில்லை.
வழக்கு சம்பந்தமாக அடிக்கடி திருப்பதிச் செல்ல வேண்டி உள்ளதால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அனைவருக்கும், தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா ரூ.3 இலட்சம் நிதியுதவியும், சத்துணவு சமையலர் வேலையும் வழங்கியதால் அவர்களது வாழ்க்கையை ஓரளவேனும் சிரமமின்றி நடத்த முடிகிறது.
இதில், பாதிக்கப்பட்ட சசிகுமார் மனைவி முனியம்மாள் படவேடு காளிகாபுரம் பள்ளியிலும், முருகன் மனைவி தஞ்சியம்மாள் படவேடு நடுநிலைப்பள்ளியிலும், பழனி மனைவி லோகேஸ்வரி காளசமுத்திரம் பள்ளியிலும், மகேந்திரன் தாய் சித்ரா பள்ளக்கொல்லை பள்ளியிலும், பெருமாள் மனைவி செல்வி, முருகாபாடி மூர்த்தி மனைவி பச்சியம்மாள், முனுசாமி மனைவி தஞ்சியம்மாள் ஆகியோர் பல்வேறு அரசு பள்ளிகளிளும் சத்துணவு சமையலர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்.
“ஆந்திர அரசு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எவ்வித கருணையும் காட்டாமலும், தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமலும் அநீதிக்கு ஆதரவாக உள்ளது. வழக்குக்காக அடிக்கடி திருப்பதி சென்று வருவது பெரும் சிரமமாக உள்ளது. தற்போது மக்கள் கண்காணிப்பகம் உதவியுடன் வழக்கு நடந்து வருகிறது.
இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறோம்” என்று பாதிக்கப்பட்டோர் தெரிவித்தனர்.
