காலை உணவு திட்டத்தை தனியாருக்குத் தாரைவார்க்க முயற்சிப்பது ஏன்? சீறும் அண்ணாமலை

 காலை உணவு திட்டத்தை தனியாருக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

Annamalai objected to privatizing the breakfast scheme for students studying in schools KAK

பள்ளிகளில் காலை உணவு திட்டம்

தமிழக அரசு சார்பாக கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதன் படி மாணவர்களின் கல்வி இடை நிற்றலை குறைக்க அரசு பள்ளிகளில் காலை மற்றும் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக அதிகமான மாணவர்கள் அரசு பள்ளிகளை தேடி வரும் நிலை உள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஏழை எளிய மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தை முன் உதாரணமாக எடுத்து மற்ற மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவு திட்டத்தை தனியாருக்கு வழங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தனியாருக்கு தாரைவார்ப்பதற்கு எதிர்ப்பு

இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் உள்ள சுமார் 350க்கும் அதிகமான பள்ளிகளில், சுமார் 65,000க்கும் அதிகமான மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்திற்கு, அம்மா உணவகங்களில் உணவு தயார் செய்யப்படுகிறது. இதன் மூலம், அம்மா உணவகங்களில் பணிபுரிவோருக்கு, நிலையான வருமானம் கிடைக்கப்பெற்று வந்தது. கடந்த 2023 ஆம் ஆண்டு, காலை உணவுத் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை தனியாருக்கு கொடுக்க சென்னை மாநகராட்சி முயன்றபோது, மாமன்றத்தில் கடும் எதிர்ப்பு எழுந்ததால், அந்த முடிவைக் கைவிட்டனர். தற்போது, மீண்டும் தனியாருக்குத் தாரைவார்க்க, ஒப்பந்தம் கோரி இருக்கின்றனர். 

நான்கு ஆண்டுகளாக டிராமா மாடல் ஆட்சி

கடந்த ஆண்டு ஜூலை மாதம், அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.21 கோடி நிதி ஒதுக்கியதாக அறிவித்தது திமுக அரசு. அப்படி மேம்படுத்தப்பட்ட அம்மா உணவகங்களில், பள்ளி மாணவர்களுக்கான உணவை தயாரிக்காமல், தனியாருக்குத் தாரைவார்க்க இரண்டு ஆண்டுகளாக முயற்சிப்பது ஏன்?  கண்துடைப்புக்காகத் திட்டங்கள் அறிவிப்பது அல்லது தங்கள் லாப நோக்கங்களுக்காகத் திட்டங்களை மடைமாற்றுவது என, நான்கு ஆண்டுகளாக டிராமா மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திமுக,

சென்னை மாநகராட்சியையும், பள்ளிக் குழந்தைகளையும் அதற்குப் பயன்படுத்த முயற்சிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தொடர்ந்து அம்மா உணவகங்களிலேயே, காலை உணவுத் திட்டத்திற்கான உணவு தயாரிக்கப்பட வேண்டும் என்றும், தனியாருக்கு ஒப்பந்தம் வழங்க முயற்சிப்பதை கைவிடவேண்டும் என்றும், சென்னை மாநகராட்சியை வலியுறுத்துவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios