ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு சொந்தமாக வீடு.. அன்னை தினத்தில் ஆனந்த் மஹிந்திரா கொடுத்த அசத்தல் பரிசு..!
இட்லி பாட்டி ஆனந்த் மஹிந்திரா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி புகழிடம் தனக்கு ஒரு வீடு கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து அவர் இதுகுறித்து ஆனந்த் மஹிந்திராவிடம் தெரிவித்த நிலையில், அவரும் நிறைவேற்றுவதாக உறுதியளித்திருந்தார்.
அன்னையர் தினத்தில் இட்லி பாட்டிக்கு வீடு கட்டிக்கொடுத்து அவரது கனவை மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா நிறைவேற்றியுள்ளார்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள ஆலாந்துறை வடிவேலாம்பாளையத்தை சேர்ந்தவர் கமலாத்தாள் பாட்டி(85). இவர், ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வருகின்றார். உதவிக்கு யாரும் இல்லாமல் தனி ஆளாக 30 வருஷமாக இந்த இட்லி கடையை அவர் நடத்தி வருகிறார். அவரே இட்லி, சட்னி, சாம்பார் தயாரித்து விற்பனை செய்து வருகின்றார். ஆரம்பத்தில் ஒரு இட்லி 25 பைசாவுக்கு விற்ற நிலையில் அதை ஒரு ரூபாயாக விலையை உயர்த்தி விற்பனை செய்து வருகின்றார். சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஏழை, எளிய மக்கள் ஏராளமானோர் தினமும் இந்த கடைக்கு வந்து சென்ற நிலையில் பாட்டி பிரபலமடைந்தார்.
இந்நிலையில், ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வரும் கமலாத்தாள் பாட்டியின் சேவையை அறிந்த மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் அவரை தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு வாழ்த்தியிருந்தார். விறகு அடுப்புக்கு மாற்றாக சமையல் எரிவாயு அடுப்பு, கிரைண்டர், மிக்சி, ஆகியவற்றை கமலாத்தாளுக்கு ஆனந்த் மஹேந்திரா வழங்கினார். இதனைத்தொடர்ந்து பாரத்கேஸ் மாதம் தோறும் இரண்டு சிலிண்டர்களையும், ஹெச் பி கேஸ் ஒரு சிலிண்டரையும் கமலாத்தாளர் பாட்டிக்கு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் இட்லி பாட்டி ஆனந்த் மஹிந்திரா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி புகழிடம் தனக்கு ஒரு வீடு கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து அவர் இதுகுறித்து ஆனந்த் மஹிந்திராவிடம் தெரிவித்த நிலையில், அவரும் நிறைவேற்றுவதாக உறுதியளித்திருந்தார். மஹிந்திரா குழுமத்தின் ரியல் எஸ்டேட் பிரிவான மஹிந்திரா லைஃப் ஸ்பேசஸ் நிறுவனம் 2.5 லட்ச ரூபாய் செலவில் 1.75 சென்ட் நிலம் வாங்கி, கமலாத்தாள் பெயரில் பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து, கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதியன்று 7 லட்சம் செலவில் பூமி பூஜை போட்டு தொடங்கியது. இந்த கட்டுமான பணிகள் கடந்த 5ம் நிறைவு பெற்றது. இந்நிலையில், மஹிந்திரா குழுமத்தின் திருப்பூர் முதன்மை செயல் அதிகாரி இட்லி பாட்டி கமலாத்தாளிடம் புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கான அன்னையர் தினத்தை முன்னிட்டு சாவியை வழங்கினார். இதனை மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.