யார் வீட்டு பணத்தை வீணாக்குறீங்க! அரசு செலவில் தனியார் பள்ளிகளுக்கு பாராட்டு விழாவா?ரத்து செய்யுங்கள்!அன்புமணி

இதுவரை இல்லாத வகையில் தனியார் பள்ளிகளுக்கு அரசே பாராட்டு விழா நடத்துவது தேவையற்றது; நியாயமற்றது. தனியார் பள்ளிகளுக்கு வலிந்து சலுகை காட்டும் நோக்கத்துடன் தான் இந்த பாராட்டு விழா நடத்தப் படுகிறது என்பதை விழாவுக்கான நிகழ்ச்சி நிரலில் இருந்தே அறிந்து கொள்ள முடிகிறது.

An appreciation party for private schools at government expense? Must cancel! Anbumani ramadoss tvk

தனியார் பள்ளிகளுக்கு மக்களின் வரிப்பணத்தில் கோடிக்கணக்கில் செலவழித்து பாராட்டு விழா நடத்த வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. அதற்கு தனியார் பள்ளிகள் தகுதியானவையும் இல்லை என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்:  தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்ற 3949 தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள், முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் சார்பில் மிகப்பெரிய அளவில் பாராட்டு விழா நடத்தப்படவிருப்பதாக தனியார் பள்ளிகள் இயக்ககம் அறிவித்து இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மக்களின் வரிப்பணத்தை வீணாக்கும் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது. 

இதையும் படிங்க: பொண்டாட்டி தாலியை விற்று ஆன்லைன் சூதாட்டம்! லட்சக்கணக்கில் பணத்தை இழந்த அங்கமுத்து தற்கொலை! கதறும் அன்புமணி!

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் தனியார் பள்ளிகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 2199 தனியார் மெட்ரிக் பள்ளிகள், 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1750 தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 3949 பள்ளிகளின் நிர்வாகிகள், முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பாராட்டு விழா நடத்தப்படும் என்றும், அதில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இதுவரை இல்லாத வகையில் தனியார் பள்ளிகளுக்கு அரசே பாராட்டு விழா நடத்துவது தேவையற்றது; நியாயமற்றது. தனியார் பள்ளிகளுக்கு வலிந்து சலுகை காட்டும் நோக்கத்துடன் தான் இந்த பாராட்டு விழா நடத்தப் படுகிறது என்பதை விழாவுக்கான நிகழ்ச்சி நிரலில் இருந்தே அறிந்து கொள்ள முடிகிறது. 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளுக்கான பாராட்டு விழாவை வேறு சில நிகழ்ச்சிகளுடன் இணைத்து ஐம்பெரும் விழாவாக கடந்த ஜூன் 14ஆம் நாள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அரசு நடத்தியது. அதில் அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனர். ஆனால், தனியார் பள்ளிகளுக்கான பாராட்டு விழாவில் பள்ளி முதல்வர்கள், பாட ஆசிரியர்கள் மட்டுமின்றி பள்ளி முதலாளிகளும் அழைத்து பாராட்டப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் பொதுத்தேர்வுகளில் 100% தேர்ச்சி பெறுவது சாதனை அல்ல. காரணம், அவை நன்கு படிக்கக் கூடிய மாணவர்களை மட்டுமே தேர்வுக்கு அனுப்புகின்றன. 

அதுமட்டுமின்றி, தனியார் பள்ளிகளில் உள்ள கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்களுக்கான பணிச்சுமை குறைவு ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது, தனியார் பள்ளிகளில் 100% தேர்ச்சியை எட்டுவது எளிதான ஒன்று தான். மாறாக, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கூட இல்லாமலும், ஆசிரியர்கள் பற்றாக்குறையாலும் தள்ளாடும் அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெறுவது தான் சாதனையாகும். ஆனால், அரசு பள்ளிகளுக்கான பாராட்டு விழாவில் அவற்றின் தலைமை ஆசிரியர்களை மட்டும் அழைத்த தமிழக அரசு, பாட ஆசிரியர்களை அழைக்கவில்லை. அதேநேரத்தில், தனியார் பள்ளிகளுக்கான பாராட்டு விழாவில் பள்ளி முதல்வர்கள் மட்டுமின்றி, அனைத்து பாட ஆசிரியர்கள், பள்ளிகளின் முதலாளிகள் ஆகியோரும் அழைத்து சிறப்பு செய்யப்படவுள்ளனர். தனியார் பள்ளிகளுக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவமும், மரியாதையும் அளிப்பதன் பின்னணியில் ஏதோ உள்ளது. அது என்னவென்று திமுக அரசை அறிந்தவர்களுக்கு நன்றாக புரியும். 

தனியார் பள்ளிகளுக்கு மக்களின் வரிப்பணத்தில் கோடிக்கணக்கில் செலவழித்து பாராட்டு விழா நடத்த வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. அதற்கு தனியார் பள்ளிகள் தகுதியானவையும் இல்லை. தமிழ்நாட்டில் தமிழை ஒரு பாடமாகக் கூட படிக்காமல் பட்டம் பெற முடியும் என்ற அவலம் நிலவுகிறது. அதற்கு முடிவு கட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன், பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் கேட்டுக் கொண்டவாறு 2006ஆம் ஆண்டில் தமிழ்க் கட்டாயப்பாடச் சட்டத்தை அன்றைய முதலமைச்சர் கலைஞர் கொண்டு வந்து நிறைவேற்றினார். ஆனால், அதன்பின் 18 ஆண்டுகள் ஆகியும் அச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதற்கு காரணம் உயர்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை வழக்குகள் தொடர்ந்து தனியார் பள்ளிகள் தடை வாங்கியிருப்பது தான். தமிழ் மொழிக்காக தந்தை கொண்டு வந்த சட்டத்தை முடக்கிய தனியார் பள்ளிகளுக்கு மகன் ஆட்சியில் பெயரன் தலைமையில் பாராட்டு விழா நடத்துவது என்ன நியாயம்? இது தமிழுக்கும், கலைஞருக்கும் இழைக்கப்படும் துரோகம் அல்லவா? தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கான கட்டணங்களை தமிழக அரசால் அமைக்கப்பட்ட கட்டண நிர்ணயக்குழு தான் நிர்ணயிக்கிறது. 

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங்கை முதல் வெட்டு வெட்டிய ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர்! துப்பாக்கி! நாட்டு வெடி குண்டுகள் பறிமுதல்!

ஆனால், 90% பள்ளிகள் அந்த கட்டண விகிதத்தை பின்பற்றுவது இல்லை. அரசால் வரும் 4ஆம் தேதி பாராட்டப்படவுள்ள பள்ளிகளில் கூட பெரும்பாலானவை அரசின் கட்டண விகிதத்தை பின்பற்றாதவையாக இருக்கலாம். அதற்காக அந்தப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தான் அரசின் பணி. அதை விடுத்து அந்தப் பள்ளிகளுக்கு தமிழக அரசே பாராட்டு விழா நடத்துவது எந்த வகையில் நியாயம்? இதன் மூலம் தமிழக அரசு சொல்லும் செய்தி என்ன? மக்களுக்கு தரமான கல்வியை இலவசமாக வழங்கவேண்டியது அரசின் கடமை. ஆனால் அந்த கடமையை செய்வதிலிருந்து கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த கட்சிகள் தவறிவிட்டன. 1976-ஆம் ஆண்டில் சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் 28 தனியார் ஆங்கிலப்பள்ளிகள் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் 1 தனியார் ஆங்கிலப்பள்ளி என் மொத்தம் 29 தனியார் பள்ளிகள் மட்டுமே இருந்தன. ஆனால் இன்று தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் இரு பங்கினர் தனியார் பள்ளிகளில் பயிலும் அவலம் நிலவுகிறது. மூன்றில் ஒரு பங்கு மாணவர்கள் மட்டுமே அரசு பள்ளிகளில் பயில்கின்றனர். 

இது அரசின் பெரும் தோல்வி ஆகும். இத்தகைய சூழலில் தனியார் பள்ளிகளுக்கு பாராட்டு விழா நடத்துவது அரசின் தோல்விக்கு விழா எடுப்பதற்கு ஒப்பானதாகும். அந்த தவறை தமிழக அரசு செய்யக்கூடாது. மாணவர்களுக்கு கல்வி வழங்குவது ஒரு சேவை ஆகும். ஆனால் தமிழகத்தில் உள்ள எந்த தனியார் பள்ளியும் கல்வி வழங்குவதை சேவையாக செய்வதில்லை. மாறாக முழுக்கமுழுக்க வணிக நோக்கத்துடன்தான் செயல்படுகின்றன. அந்த வணிக நோக்கத்திற்கு பாராட்டு விழா நடத்தினால் அது மிக மோசமான முன்னுதாரணமாக அமைந்துவிடும். இத்தகைய விழாக்களை நடத்துவதை விட்டுவிட்டு அதற்காக செய்யப்படும் செலவில் அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனியார் பள்ளிகள் 100% தேர்ச்சி என்பதே விளம்பரம் தான். அதற்காக தனியார் பள்ளிகளுக்கு பாராட்டு விழா நடத்துவது தனியார் பள்ளிகளுக்கு அரசு செலவில் செய்யப்படும் விளம்பரமாகவே அமையும். அந்த விளம்பரத்தை தமிழக அரசு செய்யக் கூடாது. ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெறவுள்ள பாராட்டு விழாவை ரத்து செய்து விட்டு, அதற்கான ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் ஆசிரியர்களை அழைத்து அவர்களுக்கு தமிழக அரசு பாராட்டு விழா நடத்துவதுடன், அவர்களுக்கு ஊக்கப்பரிசுகளும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios