கேரள அரசுப் பேருந்தில் 3000 மின்னாற்றல் வெடிமருந்துகள், 25 ஆயிரத்து 500 வெடிமருந்து குச்சிகள் கொண்ட வெடி மருந்துப் பொருள்களை பேருந்தில் கடத்திய மூவர் காவலாளர்களைக் கண்டதும் தப்பி ஓடிவிட்டனர். வெடிமருதுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

தமிழக - கேரள எல்லைப் பகுதியான குமுளியில் கேரள சோதனைச்சாவடி உள்ளது. இங்கு, மதுரையிலிருந்து கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் திருவல்லா பகுதிக்குச் சென்ற கேரள அரசுப் பேருந்தை கேரள வணிக வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில் சந்தேகத்திற்கு இடமான நிலையில் நான்கு பயண பைகள் இருப்பதைக் கண்ட அதிகாரிகள் அதன் உரிமையாளர் குறித்து விசாரித்தனர்.

அப்போது பேருந்தின் பின்பக்க வாசல் வழியாக மூன்று இளைஞர்கள் இறங்கி தமிழகப் பகுதிக்குள் ஓடினர். இதனால் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பைகளை கீழே இறக்கி சோதனை நடத்தினர்.

அந்த பைகளில் 3000 மின்னாற்றல் வெடிமருந்துகளும், 25 ஆயிரத்து 500 சாதாரண வெடிமருந்து குச்சிகளும் இருப்பது தெரிய வந்தது. 

விசாரணையில், கம்பம் அரசு மருத்துவமனை அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து மூன்று இளைஞர்கள் பைகளுடன் ஓடிவந்து பேருந்தில் ஏறியதாகவும், அவர்கள் கல்லூரி மாணவர்கள் என்றும் பொங்கல் விடுமுறை என்பதால் புத்தகங்கள், அறையில் பயன்படுத்தும் பொருள்களுடன் ஊருக்குச் செல்கிறோம் என கூறியுள்ளனர் என்றும், கம்பத்திலிருந்து பீர்மேடுக்கு அவர்கள் பயணச்சீட்டு எடுத்ததாகவும் பேருந்தின் நடத்துநர் தெரிவித்தார்.

இதுகுறித்து கேரள வணிகவரித் துறை அதிகாரிகள் காவலாளர்களுக்குத் தகவல் கொடுத்தனர்.

இடுக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேணுகோபால், கட்டப்பனை காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ்மோகன் ஆகியோர் வந்து வெடி பொருள்களை சோதனை செய்தனர்.

குமுளியில் நுழைவுப் பகுதி பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான சந்தேகத்திற்குரிய மூன்று இளைஞர்களின் படத்தை காவலாளர்கள் சேகரித்தனர்.

மேலும், பேருந்து நடத்துநரிடம் பேருந்தில் வந்தவர்கள் அவர்கள்தான் என்பதை உறுதி செய்துள்ளதாகவும், தப்பி ஓடிய இளைஞர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாகவும் கேரள காவலாளர்கள் தெரிவித்தனர்.