கர்நாடக சிறைத்துறை விதிமுறைகளின் படி, அங்குள்ள கைதிகளை வாரம் ஒருமுறை மட்டுமே சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்படும். வழக்கறிஞர்கள் மட்டுமே அடிக்கடி பார்க்க முடியும்.

ஆனால், தமக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி, சிறையே கதி என்று இருந்த இளவரசியின் மகன்விவேக், சசிகலாவுக்கு மற்றவர்களுக்கு தூதுவராகவே செயல்பட்டு வந்தார்.

அதற்காக, பெங்களூரிலேயே ஹோட்டலில் தங்கி, தினமும் விரும்பும் போதெல்லாம் சசிகலாவை பார்த்து வந்தார் விவேக். சசிகலா சொல்வதை மற்றவர்களிடம் சொல்வதும், மற்றவர்கள் சொல்வதை சசிகலாவிடம் சொல்வதும் அவருடைய வேலையாக இருந்தது.

ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் மட்டும், சிறை விதிகளுக்கு மாறாக, 23 பேர் 19 முறை சசிகலாவை சிறையில் சென்று சந்தித்துள்ளனர். இது கர்நாடக சிறைத்துறை விதிகளை மீறிய செயலாகும்.

பெங்களூரை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் இந்த தகவலை கேட்டு பெற்றுள்ளார்.

அந்த தகவலின் அடிப்படையில், அவர் கர்நாடக உள்துறை அமைச்சகத்திற்கு, கடிதம் எழுதினால், சிறை துறை அதிகாரிகள் நடவடிக்கைக்கு உள்ளாவார்கள்.

இதனால், உஷாரான சிறை நிர்வாகம், இனி கண்டிப்பாக, வாரம் ஒரு முறை மட்டுமே, சசிகலாவை பார்க்க அனுமதிக்கப்படும் என்று கண்டிப்பாக கூறிவிட்டது.

அதன் காரணமாக, பெங்களூரிலேயே தங்கி இருந்த விவேக், சென்னைக்கு வந்து, வாரம் ஒருமுறை இங்கிருந்து பெங்களூரு சென்று சசிகலாவை பார்க்கலாம் என்று முடிவு செய்துள்ளார்.

கர்நாடகாவைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவர் சசிகலாவை பார்க்க, அடிக்கடி பரப்பன அக்கிரகார சிறைக்கு சென்றுள்ளார்.

முதல் தடவை அவரிடம் எதுவும் சொல்லாத விவேக், அடுத்தடுத்து அவர் சிறைக்கு வந்து சசிகலாவை சந்தித்து பேசுவதை கண்டு, இனி அடிக்கடி அத்தையை வந்து சந்திக்காதீர்கள் என்று கோபத்துடன் கூறி இருக்கிறார்.

சசிகலா குடும்பத்திற்கு, சட்ட ரீதியாக பல்வேறு உதவிகளைச் செய்து வந்த அந்த அதிமுக பிரமுகர், விவேக் கடுமையாக பேசியதை கண்டு மிகவும் கோபமடைந்துள்ளார்.

ஆனால், கோபத்தை வெளியில் காட்டாமல், தமக்கு வேண்டிய வழக்கறிஞர் மூலமாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி, சசிகலாவை அடிக்கடி விவேக் சந்திப்பதற்கும் ஆப்பு வைத்து விட்டார் என்று கூறப்படுகிறது.