சென்னை தீவுத் திடலில் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை அகில இந்திய சுற்றுலா தொழிற்பொருட்காட்சி நடத்தப்படும். கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த கன மழையால், தீவுத்திடல் பகுதி முழுவதும் சேதமானது.

இதனால், மைதானத்தை சீரமைக்கவும், அங்கு கடைகள் அமைக்கவும் தாமதம் ஏற்பட்டது. இதனால், அங்கு அமைக்கப்பட்ட அரசின் 48 அரங்குகள்; 250 தனியார் அரங்குகள், பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவையால் எந்த வருமானமும இல்லாமல்போனது. இதையொட்டி பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

இந்நிலையில், இந்தாண்டு சுற்றுலா பொருட்காட்சி டிசம்பர் மாதம் தொடங்கும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை அதற்கான எவ்வித அறிகுறியும் தெரியாமல் உள்ளது.

கடந்த ஆண்டு ஏற்பட்ட நஷ்டத்தால், பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு கடைகள் அமைக்க பலமுறை ஏலம் விடப்பட்டது. ஆனால், யாரும் அதை எடுக்க முன்வரவில்லை.

இந்தாண்டு சுற்றுலா பொருட்காட்சி நடக்காவிட்டால், வியாபாரிகள், கைவினைஞர்கள், தொழில்முனைவோர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். மேலும், தமிழக அரசின் சுற்றுலா துறைக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.