alankanallur jallikattu begins smoothly edappadi announces car prize

உலகப் புகழ் பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. இதனை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து போட்டி தொடங்கி, விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.

அலங்காநல்லூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை உலகமே உற்று நோக்குகிறது. வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டாக நாம் கருதுகிறோம். காளைகளைத் துன்புறுத்தாமல் தங்களது குழந்தைகளைப் போல் உரிமையாளர்கள் வளர்த்து வருகின்றனர் என்று கூறினார் எடப்பாடி பழனிசாமி.

அலங்காநல்லூரில் மாடு பிடி வீரகளின் கோரிக்கையை ஏற்று, வழக்கமான நேரத்தை விட கூடுதலாக ஒரு மணி நேரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என முதலமைச்சரும் துணை முதலமச்சரும் அறிவித்தனர்.

இந்தப் போட்டியில் பங்கு பெற்று விளையாடும் சிறந்த மாடு பிடி வீரருக்கு முதலமைச்சர் சார்பில் கார் ஒன்று பரிசாக வழங்கப்பட உள்ளது. மேலும், துணை முதல்வர் சார்பிலும் கார் ஒன்று பரிசாக வழங்கப்பட உள்ளது.

இதனால் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.