தனது வீட்டுக்கு தானே குண்டு போட்ட இந்து மகா சபா நிர்வாகி..! போலிஸ் பாதுகாப்புக்காக போட்ட நாடகம் அம்பலம்
ஊரில் கெத்து காட்ட துப்பாக்கி ஏந்தி போலீஸ் பாதுகாப்பிற்காக, கூலிக்கு ஆள் வைத்து தன் வீட்டில், தானே பெட்ரோல் குண்டு வீசிய அகில பாரத இந்து மகா சபா அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் செந்தில் குமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெட்ரோல் குண்டு வீச்சு
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கேசவன் நகரைச் சேர்ந்தவர் அகில பாரத இந்து மகா சபா அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் செந்தில் குமார், இவரது வீடு முன் கடந்த 23ஆம் தேதி மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தீவிரவாதத்திற்கு எதிராக தாம் தொடர்ந்து பேசுவதால் தனது வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக செந்தில் தெரிவித்தார். பெட்ரோல் குண்டு வீச்சால் எனது குடும்பம் மற்றும் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு என போலீசாரிடம் சரமாரியாக செந்தில் குமார் கேள்வி எழுப்பினார்.
துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
இதனையடுத்து பெட்ரோல் குண்டு வீசியது யார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது தான் பல முக்கிய தகவல்கள் வெளிவர தொடங்கியுள்ளது. பாஜக மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசு சார்பாக அச்சுறுத்தல் உள்ள நபர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த அகில பாரத இந்து மகா சபா அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் செந்தில் குமாருக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. இதனை தவறாக பயன்படுத்திய செந்தில் பல இடங்களுக்கு சென்று துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்போடு கெத்தாக சென்றுள்ளார். மேலும் சட்ட விரோத செயல்களுக்கும், கட்டபஞ்சாயத்தின் போது கெத்து காட்டியுள்ளார்.
கட்சியில் பெரிய பதவி
இது தொடர்பாக புகார் வந்ததையடுத்து செந்தில் குமாருக்கு கொடுக்கப்பட்டிருந்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. இதனால் தனது ஊரில் பந்தாவாக வலம் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தான் மீண்டும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பெற திட்டமிட்டுள்ளார். இதற்காக சென்னையில், பெயிண்டிங் வேலை செய்து வரும் தனது சகோதரர் ராஜீவ்காந்தியிடம் கூறி கூலிக்கு ஆள் ரெடி செய்துள்ளார்.
மேலும் நம் வீட்டிற்கு நாமே ஆள் வைத்து பெட்ரோல் குண்டை வீசிக் கொண்டால், போலீஸ் பாதுகாப்பு கொடுப்பார்கள். பிரதமர் மோடி, அமித் ஷா, அண்ணாமலை வரைக்கும் நம்மைப் பற்றி தெரிய வரும். கட்சியிலும் பெரிய பதவிகள் கிடைக்கும் என திட்டமிட்டுள்ளார். அப்போது மாதவன் என்பவரை பிடித்தவர்கள், சென்னையில் இருந்து உளுந்தூர்பேட்டைக்கு இவரை வரவழைத்து செந்தில் குமார் தனது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி நாடகம் ஆடியுள்ளார்.
சுற்றி வளைத்து பிடித்த போலீஸ்
மேலும் பெட்ரோல் வீச்சு சம்பவத்தன்று செந்தில் பேசிய நபர்களின் செல்போன் எண்களை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். அதில் சம்பவத்தன்று குண்டு வீச்சுக்கு முன்பும் பின்பும், சென்னை, கே.கே. நகரை சேர்ந்த மாதவன் என்ற பெயிண்டரிடன் செந்தில் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. அதே தினத்தில் செந்திலின் வீட்டருகே உள்ள செல்போன் டவரில், மாதவனின் எண் பதிவாகியிருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து மாதவனை போலீசார் கைது செய்தனர். இதனை கேள்விப்பட்ட செந்தில்குமார், தனது மகனோடு தப்பிக்க முயன்றுள்ளார். அவரை சுற்றி வளைத்த போலீசார் கைது செய்து போலீஸ் பாதுகாப்போடு சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் படியுங்கள்