அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பாக முழக்கங்கள் எழுந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் அதிமுகவின் பொதுச்செயலாளர் ஓ.பி.எஸ் என சுவரொட்டி ஒட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்து போஸ்டர்
ஜூன் 23ம் தேதி அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்திற்கு முன்னோட்டமாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பெரும்பாலான நிர்வாகிகள் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்தநிலையில் அதிமுக பொதுச்செயலாளர் ஓபிஎஸ் எனவும், கழகத்தின் ஒற்றைத் தலைமையே எனவும் ஓபிஎஸ் ஆதரவாளர்களால் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கடந்த ஜூன் - 6ம் தேதி, விரைவில் கூடவுள்ள பொதுக்குழுவில் அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்க உள்ள 'எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு " என ஒட்டப்பட்ட ஒரு சில போஸ்டர்களால் சர்ச்சை ஏற்பட்டது.


போஸ்டரை கிழித்ததால் சாலை மறியல்
இந்த நிலையில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு வரும் 23ஆம் தேதி சென்னையில் கூட உள்ள நிலையில், அதற்கு முன்னதாக செயற்குழு மற்றும் பொதுக்குழு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் பெரும்பான்மையான நிர்வாகிகள் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து இந்த விவகாரம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்க உள்ள ஓ.பன்னீர்செல்வம் அவர்களை வணங்குகிறோம் என்றும், அதிமுக பொதுச்செயலாளர் ஓ.பன்னீர்செல்வம் என்றும்,கட்சியின் ஒற்றைத் தலைமையே என்றும்,எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்கு பின் மூன்றாவது தலைமையே என்று தென் மாவடங்களில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. இந்தநிலையில் சென்னை கிரின் வேஸ் சாலையில் ஒட்டப்பட்ட போஸ்டரை சிலர் கிளித்துள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
